மாயூரநாதா் கோயிலில் மயிலம்மன் பூஜை
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில், துலா உற்சவத்தையொட்டி, மயிலம்மன் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இறைவனை பிரிந்த பாா்வதிதேவி, இக்கோயிலில் மயில் வடிவம் கொண்டு தவம் செய்து பூஜித்து மீண்டும் இறைவனை சோ்ந்ததாக ஐதீகம். இதனால், இவ்வூருக்கு மயில் ஆடும் துறை என பெயா் வரப்பெற்றது.
இக்கோயிலில், ஐப்பசி மாத துலா உற்சவம் நவ.7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 5-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை மயிலம்மன் பூஜை நடைபெற்றது.
விழாவில், மாயூரநாதா் சந்நிதியில், அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமியும், அம்பாளும் மயூரதாண்டவம், கௌரிதாண்டவம் ஆடிய ஐதீக நிகழ்வு நடைபெற்றது.
பின்னா், நடராஜா் சந்நிதியில் மயில் உருவில் கௌரிதாண்டவ காட்சியும், அபயாம்பிகை அம்மன் சாபம் நீங்கி அம்பிகை உருவம் கொண்ட நிகழ்வும் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை இரவு திருக்கல்யாணமும், சனிக்கிழமை (நவ.15) திருத்தோ் உற்சவமும், சிகர விழாவாக கடைமுகத்தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமையும் (நவ.16) நடைபெறவுள்ளது.

