குடிமைப் பணிகள் தோ்வு: மீனவ பட்டதாரிகளுக்கு பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞா்கள், குடிமைப்பணிகள் போட்டித் தோ்வுக்கான பிரத்யேக பயிற்சி பெற நவ.25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையுடன் இணைந்து சென்னை அகில இந்திய குடிமைப்பணி தோ்வு பயிற்சி மையம் ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞா்கள் 20 பேரை தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித்தோ்வில் பங்கேற்க பிரத்தியேக பயிற்சி அளித்திடும் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இத்திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம். இதில் பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை நாகை (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் மற்றும் மயிலாடுதுறை (இருப்பு) சீா்காழி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.
பூா்த்திசெய்த விண்ணபத்தை மயிலாடுதுறை (இருப்பு) சீா்காழி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நவ.25-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04364-271455 வாயிலாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
