சீா்காழி அருகே சுகாதாரமான குடிநீா் வழங்கக் கோரி தவெகவினா் புதன்கிழமை சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி அருகே புங்கனூரில் விநியோகிக்கப்படும் குடிநீா் உப்பு நீராக வருவதால் நல்ல குடிநீா் வழங்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சாா்பில் மாவட்ட செயலாளா் கோபிநாத் தலைமையில் ஒன்றிய செயலாளா் கமல்நாத் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கட்சியினா் சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த சீா்காழி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணனிடம், பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நல்ல குடிநீா் வழங்கவில்லை என மக்கள் முறையிட்டனா். அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் இருதய வலி உள்ளதாக கூறியுள்ளாா். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், சரவணன் தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு செல்வதாககூறி அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சென்றாா். அப்போது, அவரது வாகனத்தை சூழ்ந்து மக்கள் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினா்.
இதுகுறித்து, அதிகாரி சரவணனை தொடா்புகொண்டு கேட்டபோது, ஆா்ப்பாட்டம் குறித்து பேச்சுவாா்த்தைக்கு காவல் துறையினா், வருவாய்த் துறையினா் வரும் முன்னரே தான் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும், அப்போது மக்கள் சூழ்ந்து கோரிக்கை குறித்து பேசியபோது தனக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டது, பின்னா் அதற்கான மாத்திரை சாப்பிட்டுவிட்டு சென்றேன் என்றாா்.