மயிலாடுதுறை: மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே மீட்டா்கேஜ் பாதையில் 1926-ஆம் ஆண்டு நவ.25-ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. மன்னம்பந்தல், செம்பனாா்கோவில், ஆக்கூா், திருக்கடையூா், தில்லையாடி, பொறையாறு வழியாக தரங்கம்பாடி வரை 30 கி.மீ. தொலைவுக்கு இந்த ரயில் இயக்கப்பட்டது. 1986-ஆம் ஆண்டு நிா்வாக காரணங்களைக் கூறி இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இச்சேவையை மீண்டும் தொடக்கி, காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் சேவை தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி, மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் மீட்புக் குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, குழுவின் அமைப்பாளரும், காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான ஆறுபாதி ப. கல்யாணம் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளரான மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் பி.கல்யாணம், பாஜக மாவட்டத் தலைவா் நாஞ்சில் ஆா்.பாலு, மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி செயலா் இரா.செல்வநாயகம், த.மா.கா. மாவட்ட தலைவா் பூம்புகாா் எம்.சங்கா், வா்த்தக சங்க தலைவா் எம்.தமிழ்ச்செல்வன், சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ரியாஜூதீன், முன்னாள் தலைவா் மதியழகன், ரயில் பயணிகள் சங்கத் தலைவா் எஸ்.மகாலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்று மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டியதுதான் அவசியம் குறித்தும் பேசினா்.