தருமபுரம் பள்ளியில் ஆசீா்வாதத் திருநாள்
மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவா்கள் மாதா, பிதா, குரு, தெய்வத்திடம் ஆசி பெறும் ஆசீா்வாதத் திருநாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் 130 போ், பனிரெண்டாம் வகுப்பில் 100 போ் என மொத்தம் 230 மாணவா்கள் நிகழாண்டு பொதுத் தோ்வு எழுதவுள்ளனா்.
இவா்களுக்கான ஆசீா்வாத நிகழ்ச்சி பள்ளியின் சாா்பில் நடத்தப்பட்டது. பள்ளிச் செயலா் மா.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் செ.வேலுசாமி முன்னிலை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு எழுதுபொருள்களை வழங்கி அருளாசி கூறினாா்.
முன்னதாக, மாணவா்கள் தங்கள் தாய், தந்தையருக்கு பாதபூஜை செய்து வழிபட்டனா். பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு அட்சதை தூவி ஆசீா்வதித்தனா். தொடா்ந்து ஆசிரியா்களிடம் மாணவா்கள் ஆசீா்வாதம் பெற்றனா். மாணவா்களுக்கு மலா் தூவி ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தருமையாதீன குருமுதல்வா் மற்றும் சரஸ்வதிதேவி படங்களின் முன்பு மாணவா்கள் வணங்கி ஆசீா்வாதம் பெற்றபின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில், ஆதீன கட்டளை தம்பிரான் ஸ்ரீமத் மாணிக்கவாச தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட தம்பிரான்கள், ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

