நாகை மாவட்டம், கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்பி, அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதம் :
கீழ்வேளூர் அரசு மருத்துவமனை, கீழ்வேளூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியதாக உள்ளது. இந்த மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பணியிடம்- 4. ஆனால், தற்போது ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். காலியாக உள்ள 3 மருத்துவர் பணியிடங்களையும் விரைவாக நிரப்ப வேண்டும்.
மருத்துவமனையில் பெண் மகப்பேறு மருத்துவர் இல்லாததால், செவிலியர்களே மகப்பேறு சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக ஒரு பெண் மகப்பேறு மருத்துவரை பணி நியமிக்க வேண்டும்.
இங்குள்ள ஸ்கேன் பரிசோதனை கருவி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ஸ்கேன் பரிசோதனைக்காக நாகை, திருவாரூர் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, ஸ்கேன் கருவியை பழுது நீக்கம் செய்ய அல்லது புதிய ஸ்கேன் கருவி வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவுக்குப் புதிய தனி கட்டட வசதியை ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழையக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
நீடித்து வரும் தொடர் மின்வெட்டால் மருத்துவப் பணிகள் தடைபடாமலிருக்கும் வகையில், கீழ்வேளூர் அரசு மருத்துவமனைக்கு இன்வெர்ட்டர் கருவிகள் வழங்க வேண்டும். மருத்துவமனையில் குடிநீர் வசதியை மேம்படுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.