திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள தனது தந்தையின் பூர்வீக இல்லத்துக்கு திங்கள்கிழமை வந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பூர்வீக இல்லம், நாகை மாவட்டம், திருக்குவளையில் முத்துவேலர் நூலகம் - அஞ்சுகம் படிப்பகமாக உள்ளது. தேர்தல் பிரசார காலங்களிலும், முதல்வர் பொறுப்பேற்ற பின்னரும், திமுக தலைவர் கருணாநிதி தனது பூர்வீக இல்லத்துக்கு வந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில், கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், கடந்த ஆக. 18-ஆம் தேதி ஸ்டாலின் திருக்குவளை இல்லத்துக்கு வந்து, கருணாநிதியின் உருவப் படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்திச் சென்றார்.
கடந்த ஆக. 28 -ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக் குழுவில், ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்றார். திமுக தலைவர் பொறுப்பை ஏற்றதையொட்டி, தனது தந்தையின் பூர்வீக இல்லமான திருக்குவளை இல்லத்துக்கு திங்கள்கிழமை வந்தார்.
திருச்சியிலிருந்து, தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக நாகை மாவட்டத்துக்கு வந்த ஸ்டாலினுக்கு, நாகை மாவட்டம், ஆலங்குடியில் மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, திருக்குவளை இல்லத்துக்கு வந்த ஸ்டாலினுக்கு இன்னிசை வாத்ய முழக்கங்களுடன் வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது, தொண்டர்கள் திரண்டிருந்து ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதையடுத்து, திருக்குவளை இல்லத்துக்கு சிறிது தொலைவுக்கு முன்பாகவே காரிலிருந்து இறங்கிய ஸ்டாலின், தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றவாறு நடந்து பூர்வீக இல்லத்துக்குச் சென்றார்.
அங்கு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தனது தாத்தா முத்துவேலர், பாட்டி அஞ்சுகம், மறைந்த முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சில நிமிட ஓய்வுக்குப் பின்னர், வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கெளதமன், ஸ்டாலினுக்கு வீணையைப் பரிசளித்தார். வெள்ளி வாள், செங்கோல், புத்தகம் உள்ளிட்டவைகளை திமுக நிர்வாகிகள் பரிசளித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர். பாலு, கே.என். நேரு, உ. மதிவாணன், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் என். கெளதமன், நிவேதா முருகன், திமுக விவசாய அணி மாநிலச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன், சட்டப் பேரவை உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக, திமுக தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு கருணாநிதி என ஸ்டாலின் பெயரிட்டார். ஆலங்குடி வழியே திருக்குவளை வரும் வழியில், ஸ்டாலினை சந்திக்க திருவாய்மூர் பகுதி சாலையோரத்தில் சில விவசாயத் தொழிலாளர்கள் காத்திருப்பதை அறிந்த ஸ்டாலின், காரை நிறுத்தி அவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.
தொண்டனாக பயணம் தொடரும்...
கருணாநிதி தனது பூர்வீக இல்லத்துக்கு வரும்போது, அங்குள்ள வருகைப் பதிவேட்டில் சில வாசகங்களை எழுதி, தனது வருகையைப் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், திங்கள்கிழமை திருக்குவளை இல்லத்துக்கு வந்த ஸ்டாலினும் அங்குள்ள வருகைப் பதிவேட்டில் சில வாசகங்களை எழுதி, தனது வருகையைப் பதிவு செய்தார்.
வருகைப் பதிவேட்டில் அவர் எழுதியவை : தலைவர் அவர்களின் பிறந்த ஊர் திருக்குவளைக்கு பல முறை வந்துள்ளேன். தலைவர் அவர்களுடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன். இன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வந்துள்ளேன். கழகத் தலைவராக வந்திருந்தாலும், தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டனாக, அவர் காட்டிய வழியில் எனது பயணம் தொடர்ந்து, தொடரும்.
திருவாரூருக்கு மு.க. ஸ்டாலின் வருகை
திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, திருவாரூருக்கு திங்கள்கிழமை மு.க.ஸ்டாலின் வந்தார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவகத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய பின்னர், திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு வருகை தந்தார். அங்கு திமுகவினர் பட்டாசு வெடித்து, அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு ஓய்வெடுத்த மு.க. ஸ்டாலின், மாலை 5.10 மணிக்கு அங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர். பாலு, கே.என். நேரு, உ. மதிவாணன், முன்னாள் எம்பி ஏ.கே.எஸ். விஜயன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆடலரசன், டி.ஆர்.பி. ராஜா மற்றும்
கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த இளம் பஞ்சாப் வீரர்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா

ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது: பிரதமர் மோடி!

கதாநாயகனான விக்கல்ஸ் விக்ரம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

