சிறு, குறு விவசாயிகளுக்கான மத்திய அரசின் கிசான் சம்மான் திட்டத்தில் பயன்பெற செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (பிப்.26,27) ஆகிய இரு தினங்களிலும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்தெரிவித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கான மத்திய அரசின் கிசான் சம்மான் திட்டத்தை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது: 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திடும் வகையில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தை தமிழக முதல்வர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாகை மாவட்டத்திலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பாரத பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் 5 ஏக்கர் மற்றும் அதற்கு கீழ் நிலமுள்ள தகுதியான விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி நாகை மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் பிப்ரவரி 26, 27 ஆகிய தேதிகளில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், குடும்ப அட்டை எண் மற்றும் ஏனைய விவரங்களை முகாம் நடைபெறும் நாள்களில் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளித்துப் பயன்பெறலாம் என்றார். தொடர்ந்து, கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ. 2000 வழங்கும் ஆணையை சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கினார். பாரத பிரதமர் நரேந்திரமோடி உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. நாகை சார் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் எம். இந்துமதி, வேளாண் துறை இணை இயக்குநர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சீர்காழியில்...
சீர்காழி வட்டாரத்தில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை ஆகியவற்றின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவிக்கான ஆணை வழங்கப்பட்டது.
வட்டாட்சியர் இரா. சங்கர், வேளாண்மை அலுவலர் வீ. பன்னீர் செல்வம் ஆகியோர் இந்த ஆணைகளை வழங்கினர். வருவாய் ஆய்வாளர் சக்திவேல், அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் கோ. பார்கவி, உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சுமார் 50 விவசாயிகளுக்கு நிதியுதவிக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும், பிரதமர் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, உரையாற்றிய நிகழ்வும் திரையிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









