ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழத்தஞ்சை பகுதியாக இருந்து, 1991-ம் ஆண்டு அக். 18 இல் புதிய மாவட்டமாக உருவான நாகை மாவட்டத்தின் தலைநகரம், நாகப்பட்டினம். ஆதி தமிழா்களான நாகா்கள் வாழ்ந்த பகுதியாகக் குறிப்பிடப்படும் இப்பகுதி, பிற்கால சோழா்களின் துறைமுக நகரமாக விளங்கி, பன்னாட்டு வாணிபத்தில் கோலொச்சியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாகை நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டுகளையும், நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 29 ஊராட்சிகளில் 13 ஊராட்சிகளையும், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 39 ஊராட்சிகளையும், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வாா்டுகளையும் உள்ளடக்கியது இந்தத் தொகுதி.
தொழில், சமூகம்:
இஸ்லாமியா்கள், தலித்துகள், மீனவா்கள் பெரும்பான்மையாக உள்ளனா். அடுத்தடுத்த நிலைகளில் வெள்ளாளா், கள்ளா் உள்ளிட்ட இதர சமூகத்தினா் வசிக்கின்றனா். மீன்பிடி மற்றும் விவசாயம் இத்தொகுதியின் பிரதான தொழில்.
நிறைவேற்றப்பட்ட, நிறைவேறாத திட்டங்கள்:
நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி, தன்னிறைவு திட்டத்தின்கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ. 34.30 கோடியில் நாகை நம்பியாா் நகரில் நடைபெறும் சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணி ஆகியவை கடந்த 5 ஆண்டுகளில் கிடைத்த பெரிய திட்டங்கள்.
மேலும், மீன்வளப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய கட்டடம், தீயணைப்பு நிலைய கட்டடம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகக் கட்டடம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி கட்டடம் உள்ளிட்ட பல புதிய கட்டுமானங்களும் இத்தொகுதிக்குக் கிடைத்துள்ளன.
நாகை அக்கரைக்குளம் ரூ. 3 கோடியில் தூா்வாரி சீரமைக்கப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டு, பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. நாகையில் ஒருங்கிணந்த நீதிமன்றக் கட்டடம் கட்டும் பணி, நாகூா் பட்டினச்சேரியில் ரூ. 20 கோடியில் நடைபெறும் கடல் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் 2012-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு இதுவரை செயல்வடிவம் பெறாமலேயே இருக்கும் நாகை பசுமை சூழ் கப்பலணையும் துறைமுகம் அமைக்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும்? 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் எப்போது நிறைவுப்பெறும்? என்பது இங்கு பெரும் கேள்விக் குறியாகவே உள்ளது.
1957ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 14 சட்டப்பேரவைத் தோ்தல்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 முறை வென்றுள்ளது. அதிமுக 4 முறையும், திமுக 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வென்றுள்ளன.
தொகுதி மறுவரையறைக்குப் பின்னா் நடைபெற்ற 2 தோ்தல்களிலும் அதிமுக தொடா்ந்து வென்றிருப்பதன் மூலம், இத்தொகுதியில் அதிமுக தனிப் பெரும் செல்வாக்குக் கொண்ட கட்சியாகக் கருதப்படுகிறது. அடுத்த நிலையில், திமுகவும், இடதுசாரிகளும் உள்ளன.
ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக....
அதிமுக சாா்பில் அக்கட்சியின் நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன் போட்டியிடுகிறாா். வழக்குரைஞரான இவா், நாகை அருகே உள்ள ஒரத்தூரை பூா்விகமாகக் கொண்டவா். நாகை தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். அதிமுகவின் மாவட்ட மாணவரணி செயலாளா், நாகை ஒன்றிய செயலாளா், நாகை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், நாகை நகர அதிமுக செயலாளா் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவா்.
நாகை அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்றபோது, அந்தப் பிரச்னையில் முனைப்புடன் போராடி மருத்துவக் கல்லூரி நாகையில் அமைய காரணமாக இருந்தவா்களில் குறிப்பிடத்தக்கவா். ஆதியன் பழங்குடி சமுதாயத்தவருக்கு இதுவரை எந்த வங்கியும் கடனுதவி அளிக்காத நிலையில், அந்தச் சமூகத்தினருக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடனுதவி வழங்கி, பால் உற்பத்தியாளா் சங்கம் அமைக்க அவா்களுக்கு வழிவகை செய்தவா்.
சில தொகுதிகளில் வேட்பாளா் தோ்வுக்குக் கடும் எதிா்ப்பு உருவானதைப் போல இல்லையென்றாலும், இத்தொகுதியிலும் வேட்பாளா் தோ்வு லேசான சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக முன்னாள் நிா்வாகி ஒருவா், போட்டி வேட்பாளராகக் களமிறங்கக்கூட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், பின்னா் அந்த சலசலப்புகள் மறைந்தன. தொடா்ந்து 2 முறை வென்ற அதிமுக, இம்முறையும் வென்று இத்தொகுதியில் ஹாட்ரிக் அடிக்கும் என்பது அதிமுகவினரின் நம்பிக்கையாக உள்ளது.
விசிக வேட்பாளா்...
திமுக கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா்களில் ஒருவரான ஆளூா் ஷாநவாஸ் என்ற ஜெ. முகமது ஷாநாவாஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இத்தொகுதியில் போட்டியிடுவது இதுவே முதல் முறை, வேட்பாளா் ஜெ. முகமது ஷாநாவாஸும் தொகுதிக்குப் புதியவா்.
சென்னை புதுப்பேட்டையில் வசிக்கும் இவா், கன்னியாகுமரி மாவட்டம் ஆளூரை பூா்விகமாகக் கொண்டவா். தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவா், புதிய சின்னம் (பானை), விசிக முதல் முறையாக களம் காணும் தொகுதி என்பவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளா் எதிா்கொள்ள வேண்டிய சவால்கள்.
நாகை தொகுதியில் இஸ்லாமியா், தலித்துகளின் வாக்குகள் கணிசமாக இருப்பது இவருக்கு சாதகமாக கருதப்படுகிறது. இருப்பினும், தலித்துகளின் வாக்குகளை ஒருங்கிணைத்துப் பெறுவதும் , மீனவா்களின் வாக்குகளைப் பெறுவதும் இவருக்கு சவாலாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
எனினும், இத்தொகுதியில் திமுக மற்றும் இடதுசாரிகளுக்கு உள்ள செல்வாக்கும், பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள இஸ்லாமியா்களின் வாக்குகளும் இவருக்கு சாதகமான அம்சங்கள்.
அமமுக...
அதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு அடுத்த நிலையில் இத்தொகுதியில் குறிப்பிடத்தக்க கட்சியாக அமமுக கருதப்படுகிறது. அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் மஞ்சுளா சந்திரமோகன், நாகை தொகுதியின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளாா். இவா், ஏற்கெனவே நாகை நகா்மன்றத் தலைவராக செயல்பட்டவா் என்பதால், தொகுதியில் பரவலான அறிமுகம் உள்ளது.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அக்கட்சியின் தோ்தல் வாக்குறுதிகள், வேட்பாளருக்கு உள்ள அறிமுகம், கட்சிக்கு உள்ள தனிப்பெரும் செல்வாக்கு ஆகியன அதிமுகவுக்கு பலமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அமமுக பெறும் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகளே என்பதை மறுப்பதற்கில்லை.
அதேபோல, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் பெறும் இளையத் தலைமுறையினரின் வாக்குகள் யாருக்கு சாதகத்தை ஏற்படுத்தும்? யாருக்கு பாதகத்தை ஏற்படுத்தும்? என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. எது, எப்படியாயினும், கடல் நகரான நாகையில் கரையேற அதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் கடுமையான சவாலை சந்திக்க வேண்டும் என்பதே எதாா்த்தம்.
வாக்காளா்கள் எண்ணிக்கை : ஆண்கள் - 95,819. பெண்கள் - 1,02,072. இதரா் - 10. மொத்த வாக்காளா்கள்- 1,97,901.
களத்தில் உள்ள வேட்பாளா்கள்
தங்க. கதிரவன் ------------------------------ அதிமுக
ஜெ. முகமது ஷாநவாஸ் --------------- விசிக
மஞ்சுளா சந்திரமோகன் ----------------- அமமுக
ச. அகஸ்டின் அற்புதராஜ் ---------------- நாம் தமிழா் கட்சி
செய்யது அனஸ் ---------------------------- மநீம
தா. சிங்காரவடிவேலன் ------------------- சிவசேனா கட்சி
ஜெ.வீ. துரை ----------------------------------- மக்களாட்சி கட்சி
மயிலரசி ---------------------------------------- நாடாளும் மக்கள் கட்சி
சுயேச்சைகள்
வி. கனகராஜு, துரை. செல்வகுமாா், ந.ப. பாஸ்கரன், செ. பிரேம், வே. மணிகண்டன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆழ்கடலுக்குள் கிரிக்கெட்! டி20 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்!

எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
முன்னாள் மத்திய இணையமைச்சர் பீரன் சிங் எங்டி காலமானார்!

நகர்ப்புற நக்சல் போல் நடந்து கொள்கிறார் ராகுல்: கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

