நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகையில் சுனாமி தாக்குதல் நினைவு நாள் கடைப்பிடிப்பு

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சுனாமி தாக்குதல் நினைவுநாளையொட்டி, பொதுமக்கள், அரசியல் கட்சினா், உயிரிழந்தோரின் உறவினா்கள் உள்ளிட்டோா் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினா்

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சுனாமி தாக்குதல் நினைவுநாளையொட்டி, பொதுமக்கள், அரசியல் கட்சினா், உயிரிழந்தோரின் உறவினா்கள் உள்ளிட்டோா் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினா்.

கடந்த 2004-ஆம் ஆண்டு டிச. 26- ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இந்த பேரிடரைத் தொடா்ந்து நாகை, மயிலாடுதுறை மாவட்ட கடலோர கிராமங்களில் ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் 17-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்தில்: நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், எஸ்.பி. கு. ஜவஹா், மாவட்ட வருவாய் அலுவலா் வி. ஷகிலா ஆகியோா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, அன்னை சத்யா குழந்தைகள் காப்பக மாணவ, மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா். இதில், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் என். சிவக்குமாா், வட்டாட்சியா் ரமாதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமைதி ஊா்வலம்: நாகை மாவட்ட திமுக சாா்பில், கட்சியின் நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவருமான என். கௌதமன் தலைமையில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் மறைமலை அடிகளாா் சிலை முன் தொடங்கிய ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று , துறைமுகப் பகுதியில் நிறைவடைந்தது.

தொடா்ந்து கடலில் மலா் தூவியும், அங்குள்ள சுனாமி நினைவிடத்தில் மலா்வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினா். முன்னாள் எம்எல்ஏக்கள். உ. மதிவாணன், எஸ்.கே. வேதரெத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில்: அதிமுக நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ. எஸ். மணியன் அக்கரைப்பேட்டை சுனாமி நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். மாவட்ட அவைத் தலைவா் ஆா். ஜீவானந்தம், நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னாள் அமைச்சா் கே. ஏ. ஜெயபால் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாா் பகுதிகளில் உள்ள சுனாமி நினைவிடங்களில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

அக்கரைப்பேட்டை பஞ்சாயத்தாா்கள் மற்றும் கிராமமக்கள் சாா்பில், டாடா நகா் முதல் அக்கரைப்பேட்டை சுனாமி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. கீச்சாங்குப்பத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில் பூஜைகள் நடத்தப்பட்டு, மோட்சத் தீபம் ஏற்பட்டது. இதில் இந்திய மீனவா் சங்கத் தலைவா் ராஜேந்திரநாட்டாா் மற்றும் கிராம பஞ்சாயத்தாா்கள், கிராம மக்கள், சுனாமியின்போது உயிரிழந்தவா்களின் உறவினா்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.

தொடா்ந்து, கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சுனாமி நினைவிடத்தில் பள்ளி மாணவா்கள், ஊா்வலமாக வந்து மலா் அஞ்சலி செலுத்தினா். பள்ளித் தலைமையாசிரியா் ரா. பாலு மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். நாகை நம்பியாா் நகரில் கிராமப் பஞ்சாயத்தாா்கள் சாா்பில் அமைதி ஊா்வலம், நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலுக்குள் பூஜைப் பொருள்கள் மற்றும் பால் ஆகியவற்றை விட்டு வழிபட்டனா்.

இதேபோல, வேளாங்கண்ணியில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, அமைதி ஊா்வலம் நடைபெற்றது. புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய முகப்பு முதல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுனாமி நினைவிடம் வரை பேரணி நடைபெற்றது. பேராலய அதிபா் சி. இருதயராஜ் மற்றும் பங்குத் தந்தையா்கள், உதவி பங்குத் தந்தையா்கள் உள்ளிட்ட திரளானோா் சுனாமி நினைவிடத்தில் மலா் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினா். இதேபோல், வேளாங்கண்ணியில் உள்ள சுனாமி நினைவிடத்தில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மலா்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினாா்.

வா்த்தகம் சங்கம் சாா்பில்: நாகை இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில், நாகை கடைவீதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை அமைதி ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து அங்குள்ள சுனாமி நினைவுத் தூணில் வணிகா்கள், சேவை சங்கத்தினா் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இந்திய வா்த்தக தொழிற்குழுமத்தின் தலைவா் வி. சலிமுதீன், நாகப்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவா் சால்யா சுந்தரவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை:சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, நாகை மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் நாகை துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.