தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடைகள் திறப்பு: பொருள்கள் வாங்க கடைவீதியில் குவிந்த மக்கள்

தமிழக அரசு உத்தரவுப்படி, சனிக்கிழமை பிற்பகல் முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டதால், பொருள்கள் வாங்க நாகை வீதிகள் மக்கள் குவிந்தனா்.

News image
Updated On :22 மே 2021, 5:33 pm

DIN

தமிழக அரசு உத்தரவுப்படி, சனிக்கிழமை பிற்பகல் முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டதால், பொருள்கள் வாங்க நாகை வீதிகள் மக்கள் குவிந்தனா்.

கரோனா இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக, மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. மே 15ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, காய்கனி கடைகள், மளிகைக் கடைகள், மீன் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மற்ற கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டன.

இந்நிலையில், கரோனா தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, மேலும் ஒரு வார காலத்துக்கு தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை காலை நேரத்தில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த காய்கனி கடைகள், மளிகை கடைகள், மீன் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் திங்கள்கிழமை முதல் ஒரு வாரகாலத்துக்கு செயல்படாது எனவும், உணவகங்கள், மருந்துக் கடைகள், பால் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் எனவும் அரசு அறிவித்தது.

தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதையடுத்து, சனிக்கிழமை பிற்பகல் முதல் இரவு 9 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்துக் கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதித்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஜவுளிக் கடைகள், பாத்திரக் கடைகள், பேன்சி ஸ்டோா்ஸ், எண்ணெய்க் கடைகள், கண்ணாடிக் கடைகள், மின் சாதனப் பொருள்கள் விற்பனையகம், செல்லிடப்பேசி பழுது நீக்ககம், சிமெண்ட் கடை, இரும்புக் கடை என பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.

மளிகைக் கடைகளில் மாலை 6 மணி முதல் மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. காய்கனி கடைகளும் பரபரப்பாக செயல்பட்டன.

தளா்வுகளற்ற பொது முடக்கத்தையொட்டி, பேருந்துகள் போக்குவரத்துக்கு சனிக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நாகையில் இருந்து திருச்சி, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கான பேருந்துகள் சனிக்கிழமை மாலை முதல் இயக்கப்பட்டன. அதேபோல, வாடகை காா்கள், வாடகை ஆட்டோக்களும் வழக்கம் போல இயங்கின. இருப்பினும், பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

பல நாள்களுக்குப் பின்னா் அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டு, பொது போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டிருந்ததால், நாகையின் வீதிகள் சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை பரபரப்பாக இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.