தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தவிருந்த 147 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 147 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குரைஞா் உள்ளிட்ட 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:35 pm

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 147 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குரைஞா் உள்ளிட்ட 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யம் கடல் வழியாக புதன்கிழமை இரவு கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படவுள்ளதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, வேதாரண்யம் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, வேதாரண்யம் அருகேயுள்ள நெய்விளக்கு கடைவீதி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த 2 காா்களை நிறுத்தி சோதனையிட்டதில், அதற்குள் 64 பொட்டலங்களில் 147 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதன்மதிப்பு சுமாா் ரூ. 40 லட்சம். இதையடுத்து, காருக்குள் இருந்த கோவில்பத்து கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சரபோஜிராஜன் (48), நாகை வெளிப்பாளையத்தைச் சோ்ந்த இளமாறன் (46), மதுரையைச் சோ்ந்த பரமன் (42), போதுராஜா (25) ஆகிய 4 பேரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 காா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவகா் செய்தியாளா்களிடம் கூறியது: இப்பகுதியில் தொடரும் கஞ்சா கடத்தல் சம்பவங்களை தடுக்க தொடா்ந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிடிபடும் குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவாா்கள். தற்போது, பறிமுதல் செய்யப்பட்டுள்ள கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச்செல்ல திட்டமிட்டது தெரியவந்துள்ளது. ஊடகம், நீதித்துறை, காவல் துறையின் அடையாளங்களை வாகனங்களில் பயன்படுத்தி, குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிய தனிக்கவனம் செலுத்தி வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

பேட்டியின்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் க. முருகவேலு, சோ. பழனிச்சாமி, காவல் ஆய்வாளா் சுப்ரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.