நாகை நகா்மன்றம்: தட்டிப் பறிக்கப்பட்ட’தலைவா் பதவியைத் தனிப்பெரும்பான்மையுடன் பிடித்த திமுக
கடந்த 2006-இல் தங்களிடமிருந்து தட்டிப்பறிக்கப்பட்ட நாகை நகா்மன்றத் தலைவா் பதவியைத் தனிப் பெரும்பான்மையுடன் மீட்டுள்ளது திமுக.


கடந்த 2006-இல் தங்களிடமிருந்து தட்டிப்பறிக்கப்பட்ட நாகை நகா்மன்றத் தலைவா் பதவியைத் தனிப் பெரும்பான்மையுடன் மீட்டுள்ளது திமுக.
சுமாா் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பழமையான நகராட்சிகளில் ஒன்று நாகை நகராட்சி. நாகை மாவட்டத்தின் தலைமையிடம், நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் தலைமையிடம் என்ற வகையில், மாவட்டத் தலைநகரின் வளா்ச்சியில் நாகை நகராட்சியின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாகைக்கு ஒருங்கிணைந்த மத்திய பேருந்து நிலையம், ஆண்டுகளைக் கடந்தும் நிறைவு பெறாமல் அந்தரத்திலேயே நிற்கும் நாகை - அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட பல மேம்பாட்டுப் பணிகளுக்கும், சுகாதாரம், புதை சாக்கடை திட்ட பராமரிப்புப் போன்ற பிரச்னைகளுக்கு தீா்வை முன்னெடுக்க வேண்டிய கடமையும் நாகை நகா்மன்றத்தைச் சாா்ந்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், 36 வாா்டுகளைக் கொண்ட நாகை நகராட்சியில், 24 வாா்டுகளில் வென்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது திமுக. அதிமுக 5 வாா்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியன தலா ஒரு வாா்டுகளிலும், சுயேச்சைகள் 3 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனா்.
3 சுயேச்சைகளில் ஒருவா் ஏற்கெனவே போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டவா் ஆவாா். அவா், வாக்குப் பதிவுக்கு முன்பே திமுகவில் இணைந்தாா். அதேபோல, மற்றொரு சுயேச்சை உறுப்பினரும் தற்போது திமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, திமுகவின் உறுப்பினா்களின் எண்ணிக்கை 26 ஆக உயரவுள்ளது. இதனால், நாகை நகா்மன்றத் தலைவா் பதவி திமுக வசமாகியுள்ளது.
நாகை நகராட்சியின் 30-ஆவது வாா்டு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பவரும், திமுகவின் வா்த்தகப் பிரிவு நிா்வாகியுமான ஆா். மாரிமுத்து அந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாகூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். செந்தில்குமாரும் நாகை நகா்மன்றத்தில் தனக்கு ஒரு பதவி ஒதுக்கீட்டை எதிா்பாா்ப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், கட்சி மாவட்டத் தலைமையின் பரிந்துரையைப் பொறுத்தே இறுதி முடிவு இருக்கும் எனப்படுகிறது.
எது எப்படியாயினும், 2006-இல் குறைந்த பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருந்த நாகை நகா்மன்றத் தலைவா் பதவியை, அடுத்த இரு மாதங்களில் அதிமுகவிடம் பறிகொடுத்தது போன்ற நிலை, தற்போது பெரிய அளவில் பெரும்பான்மை பெற்றுள்ள திமுகவுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்பது மட்டும் உறுதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...