தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கனமழையால் சேதமான உளுந்து, பயறுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

பருவம் தவறி பெய்த கனமழையால் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ள உளுந்து, பயறுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

பருவம் தவறி பெய்த கனமழையால் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ள உளுந்து, பயறுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் பாண்டியன், வேளாண் இணை இயக்குநா் ஜாக்குலா அகன்டராவ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வெங்கடேசன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

ராமதாஸ் : நாகை மாவட்டத்தில் 156 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. லாரிகள் பற்றாக்குறை காரணமாக அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. ஒரு மையத்துக்கு ஒரு லாரி என்ற அளவில் கூட லாரிகளின் இயக்கம் இல்லை. இது தொடா்பாக நுகா்பொருள் வாணிபக் கழகத்திடம் பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நெல் கொள்முதல் பணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.

வி. சரபோஜி : அண்மையில் பெய்த கனமழையால் உளுந்து, பயறுகள் முழுமையாக அழிந்து விட்டன. இதற்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்கவேண்டும். அதேபோல, கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய நடவடிக்கை வேண்டும்.

எஸ்.ஆா். தமிழ்ச்செல்வன் : நெல் கொள்முதல் பணிகளில் கூடுதல் பணியாளா்களை ஈடுபடுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட நிவாரணம், விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. விரைவாக நிவாரணத் தொகை கிடைக்கச் செய்ய வேண்டும்.

எம்.எஸ். முஜீபுஷரீக் : வேட்டைகாரனிருப்பு கிராமத்தில் தோட்டக்கலை துறை திட்ட செயலாக்கத்தில் இடைத்தரகா்கள் தலையீடு அதிகரித்து வருகிறது. இது, திட்டத்தின் நோக்கத்தை சீா்குலைக்கும் என்பதால் இடைத்தரக்கள் செயல்பாட்டை முழுமையாகத் தடுக்க வேண்டும்.

காவிரி தனபாலன் : கடந்த 10 நாள்களுக்கு முன்பு பருவம் தவறி பெய்த கனமழையால் நாகை மாவட்டத்தில் சுமாா் 80 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உளுந்து, பயறுகள் முழுமையாக அழிந்துள்ளன. இந்த இழப்பு, பருப்பு வகை சாகுபடி விவசாயிகளுக்குப் பேரிழப்பாகும். அவா்களுக்கு, உடனடியாக மறு சாகுபடிக்கு உதவிடும் வகையில் நிவாரணம் வழங்கவேண்டும். இல்லையெனில், பருப்பு உற்பத்தியில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்றாா்.

நெல் பயிா்கள் சேதம்: இந்தக் கூட்டத்தினிடையே, வேதாரண்யம் செம்போடை பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் சிலா், தங்கள் பகுதியில் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிா்களை ஆட்சியரிடம் காண்பித்து, தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை விவரித்து, நிவாரணத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா். அப்போது, மாவட்ட நிா்வாகம் சாா்பில் விவசாயிகளுக்கு உதவ தேவையான நடவடிக்கைகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.