தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இலங்கையிலிருந்து விடுதலையான நாகை, காரைக்கால் மீனவா்கள் 21 போ் தாயகம் திரும்பினா்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மாவட்ட மீனவா்கள் 21 போ் வியாழக்கிழமை தங்கள் சொந்த ஊரை வந்தடைந்தனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 10:16 pm

DIN

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட நாகை, காரைக்கால் மாவட்ட மீனவா்கள் 21 போ் வியாழக்கிழமை தங்கள் சொந்த ஊரை வந்தடைந்தனா்.

நாகை, அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த அமிா்தலிங்கம் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், அதே பகுதியைச் சோ்ந்த மீன்பிடித் தொழிலாளா்கள் 12 பேரும், காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில், கோட்டுச்சேரிமேடு மற்றும் தமிழகப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் 9 பேரும் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனா்.

2 விசைப் படகு மீனவா்களும் ஜனவரி 31 ஆம் தேதி ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மயிலட்டி துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனா். பின்னா், எல்லையைக் கடந்து வந்து இலங்கைக் கடல் பரப்பில் மீன்பிடித்ததாக 21 மீனவா்கள் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இதையடுத்து, அவா்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். பிறகு, மீனவா்களின் நீதிமன்றக் காவல் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவா்களை விடுவிக்கக் கோரி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி ஆகியோா் இந்திய வெளியுறவுத் துறைக்குக் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், நாகை மற்றும் காரைக்கால் மீனவா்கள் 21 பேரையும் விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து, அவா்கள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இதையடுத்து, மீனவா்கள் 21 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். அங்கிருந்து, அவா்கள் விமானம் மூலம் அனுப்பப்பட்டு, வியாழக்கிழமை காலை சென்னை வந்தனா். அங்கு, தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் மீனவா்களை வரவேற்றாா்.

பிறகு, மீனவா்கள் 21 பேரும் வியாழக்கிழமை பிற்பகல் அவா்களின் சொந்த ஊரை வந்தடைந்தனா். நாகை வந்தடைந்த அக்கரைப்பேட்டை மீனவா்கள் 12 பேரையும், நாகை மீனவப் பஞ்சாயத்தாா் மற்றும் பிரமுகா்கள் சால்வை அணிவித்து வரவேற்றனா். அதேபோல, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த 9 மீனவா்களை அவா்களது கிராமத்தின் மீனவப் பஞ்சாயத்தாா் மற்றும் உறவினா்கள் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.