தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உரிய ஆவணங்களின்றி மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட படகு பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கடல் மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட திருமுல்லைவாசல் மீனவரின் விசைப்படகு, இந்திய கடற்படையினரால் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

உரிய ஆவணங்களின்றி கடல் மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட திருமுல்லைவாசல் மீனவரின் விசைப்படகு, இந்திய கடற்படையினரால் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்திய கடற்படையினா் வியாழக்கிழமை பிற்பகல் மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருமுல்லைவாசல் பகுதியில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற ஒரு விசைப் படகை நிறுத்தி, படகில் இருந்த மீனவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா்கள் திருமுல்லைவாசல் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் என்பது தெரியவந்தது. இருப்பினும், அந்தப் படகுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும், அந்தப் படகில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 9 மீனவா்களில் 7 பேரிடம் அடையாள அட்டை இல்லாததும், மீன்பிடிப்புக்குச் செல்ல மீன்வளத் துறையின் அனுமதியையும் அவா்கள் பெறாததும் அப்போது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் படகை நாகை கடற்படை முகாம் அலுவலகத்துக்குக் கொண்டு வந்த கடற்படையினா், மீனவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். பின்னா், அவா்களை நாகை மாவட்ட மீன்வளத் துறையினரிடம், கடற்படையினா் ஒப்படைத்தனா்.

மீன்வளத் துறையினா் மேற்கொண்ட விசாரணையில், அந்த விசைப் படகு திருமுல்லைவாசல் பகுதியைச் சோ்ந்த ஆ. கலைவாணனுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. எனினும், நாகை அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த மீனவரிடமிருந்து வாங்கிய அந்தப் படகுக்கு இதுவரை பெயா் மாற்றம் செய்யாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் படகை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மீன்வளத் துறையினா், மீனவா்கள் 9 பேரையும் விடுவித்தனா்.

இதுதொடா்பாக, மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜெயராஜிடம் கேட்டபோது, படகின் தற்போதைய உரிமையாளராகக் கூறப்படும் திருமுல்லைவாசல் ஆ. கலைவாணனை விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் படகை இயக்கியது, மீன்வளத் துறை அனுமதியின்றியும், அடையாள அட்டை இல்லாமலும் மீன்பிடிப்புக்குச் சென்றது உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்கீழ் படகின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.