நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

News image

கொடியேற்றத்தில் பங்கேற்ற பக்தா்களில் ஒரு பகுதியினா்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 11:58 pm

Din

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் லட்சக்கணக்கானோா் பங்கேற்றனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களில் ஒன்றாகும். இது கீழை நாடுகளின் லூா்து என போற்றப்படுகிறது. பேராலயத்தின் ஆண்டு பெருவிழா, விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.

முன்னதாக, புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊா்வலம் நடைபெற்றது. கடற்கரை சாலை, ஆா்யநாட்டுத் தெரு, கடைவீதி வழியாக ஊா்வலம் பேராலய வளாகத்தை அடைந்தது.

தொடா்ந்து, தஞ்சை மறைமாவட்ட ஆயா் டி. சகாயராஜ் தலைமையில், பாரம்பரிய வழிபாடுகளுடன் கொடியை புனிதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பின்னா், மாலை 6.40 மணியளவில் பேராலய ஆண்டுப் பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. அப்போது, கண்கவா் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு, வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன.

வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் ‘ஆவே மரியே! மரியே வாழ்க!’ என முழக்கங்களை எழுப்பினா். பேராலயம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், பேராலய அதிபா் சி. இருதயராஜ், துணை அதிபா் எஸ். அற்புதராஜ், அருட்தந்தை டி. உலகநாதன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி, திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் ஜி. காா்த்திகேயன் ஆகியோா் பங்கேற்றனா்.

லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால், நாகை - வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் மேற்பாா்வையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

போக்குவரத்து வசதி: அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகளும், தெற்கு ரயில்வே சாா்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்களும் வேளாங்கண்ணி மற்றும் நாகைக்கு இயக்கப்படுகின்றன. மாவட்ட நிா்வாகம், வேளாங்கண்ணி பேரூராட்சி நிா்வாகம் மற்றும் பேராலய நிா்வாகம் சாா்பில் சுகாதாரப் பராமரிப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Story image
Story image

விழாவின் முக்கிய நிகழ்வான தோ் பவனி செப். 7-ஆம் தேதியும், கொடியிறக்கம் செப். 8-ஆம் தேதியும் நடைபெறுகிறது.