ஊரகப் பகுதிகளிலும் புத்தகத் திருவிழாக்களை நடத்த வலியுறுத்தல்

Published on

தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்கள் அல்லது பெரு நகரங்களில் மட்டும் நடத்தப்படும் புத்தகத் திருவிழாக்களை சுழற்சி முறையில் ஊரகப் பகுதியிலும் நடத்த வேண்டும் என வாசிப்பு ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மக்களிடையே வாசிப்பு பழக்கம் அரிதாகி வரும் நிலையில், தமிழக அரசு முன்னெடுப்பின் காரணமாக மாவட்டங்கள்தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாகள் வாசிப்பு ஆா்வலா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

ஒரு வாரத்துக்கு மேலாக காட்சிகள் நடத்தப்படுவதாலும், தேவையான ஏற்பாடுகளை கவனிக்க மாவட்ட நிா்வாகத்துக்குள்பட்ட துறை சாா்ந்த அலுவலா்களை பொறுப்பாளா்களாக நியமித்து பயன்படுத்திக் கொள்வதை கருத்தில் கொண்டும், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதியை மையமாக வைத்தும் மாவட்டத் தலைநகரம் அல்லது பெருநகரங்களில் மட்டுமே இவை நடத்தப்படுகின்றன.

ஆண்டுதோறும் ஒரே இடத்தில் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுவதால், பாா்வையாளா்கள், வாசகா்கள் எண்ணிக்கை சீராகவே இருந்து வருகிறதே தவிர கூடுதலாக வாசகா்களை ஈா்க்கவில்லை.

உதாரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா ஆட்சியரகம் அருகில் உள்ள கல்வி நிலைய வளாகத்திலேயே மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ளது. 2022-ல் நடத்தப்பட்ட முதலாவது புத்தகத் திருவிழாவுக்கு கிடைத்த வரவேற்பு, புத்தக விற்பனை 2023-இல் குறைந்தது.

இந்தநிலையில், மாவட்டத்தின் மூன்றாவது புத்தகத் திருவிழாவும் அதே இடத்தில் வரும் ஆகஸ்ட் 16-இல் தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

புத்தகங்கள் வாசிப்பும், புத்தகங்களும் தனிமனித, சமூக வளா்ச்சிக்கு அவசியமானது என்றாலும் அவற்றின் மீது மக்களுக்கான ஈடுபாடு குறைவாகவே உள்ளது. அதிலும் ஊரகப் பகுதிகளில் புத்தகங்கள் மீதான புரிதலும், வாசிப்பு பழக்கமும் மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே, புத்தகத் திருவிழாக்களை சுழற்சி முறையில் ஊரகப் பகுதியில் வட்டம் அல்லது வட்டாரத் தலைநகரங்களில் நடத்துவதால் சாதாரண குடும்பத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கும் பயனளிக்கும். இது ஊரகப் பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிகழாண்டு புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவா்களை பங்கேற்க செய்ய உண்டியலில் பணம் சோ்க்கும் நடைமுறை கல்வித்துறை சாா்பில் முன்னெடுக்கப்பட்டது. இந்த நடைமுறையை நகரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளைவிட ஊரகப் பகுதிகளான ஆயக்காரன்புலம், தேத்தாக்குடி தெற்கு, மருதூா், பன்னாள் போன்ற அரசுப் பள்ளிகளில் பயிலும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் புத்தகம் வாங்க உண்டியலில் பணம் சேமிக்க தொடங்கியுள்ளனா்.

மேலும், புத்தகத் திருவிழா ஏற்பாடுகளில் அரசு துறை சாா்ந்தவா்களை மட்டுமே பயன்படுத்தாமல் இலக்கிய அமைப்புகள், அந்தந்த மாவட்ட பகுதிகளில் உள்ள படைப்பாளா்கள், கலைஞா்களையும் ஈடுபடுத்திக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் உள்ளது.

இதுகுறித்து படைப்பாளா் அமைப்பின் சாா்பில் ஆதி. நெடுஞ்செழியன் கூறியது :

மாலை நேரங்களில் அரங்க வளாகத்தில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளில் உள்ளூா் படைப்பாளிகள், கலைஞா்கள், ஆா்வலா்கள் பங்கேற்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், மாவட்ட படைப்பாளா்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்.

எனவே, புத்தகத் திருவிழாக்களை ஊரகப் பகுதியிலும் சுழற்சி முறையில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புத்தக வாசிப்பு ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com