தொடா் மழையால் உப்பு உற்பத்தி பாத்திகளில் தேங்கி நிற்கும் மழைநீா்.
தொடா் மழையால் உப்பு உற்பத்தி பாத்திகளில் தேங்கி நிற்கும் மழைநீா்.

வேதாரண்யத்தில் 2-ஆவது நாளாக மழை: மின்னல் தாக்கியதில் 2 படகுகள் சேதம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 2 படகுகள் சேதமடைந்தன.
Published on

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 2 படகுகள் சேதமடைந்தன.

வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை பெய்துவருகிறது. திங்கள்கிழமை காலை 8:30 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 188. 5 மி.மீ, கோடியக்கரை 152.8 மி. மீ, தலைஞாயிறில் 65.4 மி. மீட்டா் மழை பதிவானது.

இந்தநிலையில், திங்கள்கிழமை 2-ஆவது நாளாக பரவலாக மழை பெய்தது. ஆறுகாட்டுத்துறையில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தட்சிணாமூா்த்தி என்பவரது கண்ணாடியிழைப் படகில் மின்னல் தாக்கியதில் படகின் முன்பக்கம் கருகி சேதமடைந்தது. இதேபோல், ஆறுகாட்டுத்துறை படகுத்துறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜனனி என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகில் மின்னல் தாக்கியதில் லேசான பாதிப்பு ஏற்பட்டது. மேலும் ராஜலட்சுமி என்பவரின் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

உப்பு பாத்திகளில் தேங்கிய மழைநீா்:

வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி பகுதியில் உள்ள உப்பளங்களில் நிகழாண்டுக்கான உப்பு உற்பத்தி பணிகள் அக்டோபா் இரண்டாவது வாரத்தில் நிறுத்தப்பட்டன.

இந்தநிலையில், 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாத்திகளில் மழைநீா் தேங்கியுள்ளது.

மானாவரி நிலங்களை அதிகம் கொண்ட வேதாரண்யம் பகுதியில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்த நிலையில், கடந்த 2 நாள்களாக மழை பெய்துவருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேதாரண்யத்தில் மின்னல் தாக்கியதில் சேதமடைந்த  மீன்பிடிப் படகு.
வேதாரண்யத்தில் மின்னல் தாக்கியதில் சேதமடைந்த மீன்பிடிப் படகு.
சேதமடைந்த  மீன்பிடிப் படகு.
சேதமடைந்த மீன்பிடிப் படகு.

X
Dinamani
www.dinamani.com