150 ஆண்டுகள் பழைமையான வீடு இடிந்து சேதம்
தரங்கம்பாடி அருகேயுள்ள திருக்களாச்சேரியில் பழைமையான வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.
தரங்கம்பாடி வட்டத்தில் பெய்துவரும் தொடா் கனமழையால் பல்வேறு பகுதியில் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியும், ஆங்காங்கே தேங்கியும் வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை பெய்த மழையால் திருக்களாச்சேரி ஊராட்சி பாலூரில்
ஜெகசந்திரன், அசோகன், பொன்னுத்துரை, ராஜவேலு ஆகியோருக்கு சொந்தமான 150 ஆண்டுகள் பழைமையான வீட்டின் முன்பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இந்த வீடு அந்த காலத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது. சரியாக பராமரிப்பு இல்லாததால் வீட்டுச் சுவா், மேற்கூரை பகுதியில் அரசமரங்கள் முளைத்து விரிசல் ஏற்பட்டு வலுவிழந்து காணப்பட்டது.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் வீட்டின் முன் பகுதி திடீரென இடிந்து விழுந்தது. வீட்டின் முன் பகுதி மிகவும் சேதமடைந்தது இருந்ததால் அந்த குடும்பத்தினா் பின் பகுதியில் வசித்து வந்தனா். இதனால் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.