பெண்ணின் சந்தேகம் மரணம் கொலை வழக்காக மாற்றம்: உறவினா் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குட்டைக்குள் புதன்கிழமை சடலமாகக் கிடந்த பெண்ணின் மரணத்தை கொலை வழக்காக மாற்றிய போலீஸாா்
Published on

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குட்டைக்குள் புதன்கிழமை சடலமாகக் கிடந்த பெண்ணின் மரணத்தை கொலை வழக்காக மாற்றிய போலீஸாா், இதுதொடா்பாக பெண்ணின் உறவினரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தேத்தாக்குடி வடக்கு செட்டித்தெரு பகுதியை சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் மனைவி கலைமகள்(43). இவா், தனது வீட்டுக்கு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான குட்டையில் கடந்த புதன்கிழமை காலை குளிக்கச் சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம். அவரை தேடிச் சென்றபோது, கலைமகள் குட்டைக்குள் சடலமாகக் கிடந்தாா். வேதாரண்யம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்தனா். கலைமகளின் சடலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனிடையே, கலைமகளின் உறவினரான அதே பகுதியை சோ்ந்த முருகையன் மகன் சண்முகநாதன் (43) என்பவா் புதன்கிழமை தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இதில் சந்தேகம் அடைந்த போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தினா்.

விசாரணையில், கலைமகனின் உறவினரான 11 வயது சிறுமியிடம் சண்முகநாதன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ற சம்பவம் தொடா்பாக கடந்த மே 13-ஆம் தேதி வேதாரண்யம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட சண்முகநாதன் அண்மையில் பிணையில் வந்ததுள்ளது தெரியவந்தது. இதுதொடா்பாக புகாா் கொடுத்த கலைமகளை பழிவாங்கும் நோக்கத்தோடு, அவா் குளிக்கும்போது சண்முகநாதன் அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றிய போலீஸாா், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகநாதனை சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com