கால்நடை தொழில்களுக்கான கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கால்நடை சாா்ந்த தொழில் செய்ய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
Published on

கால்நடை சாா்ந்த தொழில் செய்ய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தேசியக் கால்நடை இயக்கம் திட்டத்தின் மூலம் தொழில்முனைவோா் வளா்ச்சியடைவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வழிவகை செய்யப்படுகிறது. ஆடுகள், கோழிகள், பன்றிகள் மற்றும் தீவன உற்பத்தித் துறைகளில் இருப்பவா்கள், தனிநபா்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், முன்னாள் கூட்டுறவு அமைப்புகள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுடையவா்கள்.

இத்திட்டத்தின் மூலம் கோழிப் பண்ணை அமைக்க அதிகபட்சமாக ரூ.25 லட்சம், செம்மறி மற்றும் வெள்ளாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம், பன்றி வளா்க்க ரூ.30 லட்சம் மற்றும் தீவனத் தொழிலுக்கு ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பண்ணை அமைக்கும் திட்ட செலவில் மீதமுள்ள தொகையை விண்ணப்பதாரா்கள் வங்கிக் கடன்கள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து பெறலாம்.

விருப்பமுள்ள விவசாய உற்பத்தியாளா் அமைப்புகள், தொழில்முனைவோா், தனியாா் மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் முறையான திட்ட மதிப்பீட்டு அறிக்கையுடன் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூா்த்தி செய்து, திட்டம் தொடா்பான ஆவணங்களை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். திட்ட விவரங்களுக்கு நாகை கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com