நாகை அருகே பாலையூரில் மழையில் சேதமடைந்த நெற்பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்திய வேளாண்மை துறையினா்.
நாகை அருகே பாலையூரில் மழையில் சேதமடைந்த நெற்பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்திய வேளாண்மை துறையினா்.

மழையில் சேதமடைந்த நெற்பயிா்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

Published on

டித்வா நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டித்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் 1.30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிரில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது இதையடுத்து, சேதமடைந்த நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் குறித்து வேளாண் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

நாகை அருகே பாலையூா் பகுதியில் சேதமடைந்த சம்பா மற்றும் தாளடி பயிா்கள் குறித்து வேளாண்மை இணை இயக்குநா் கண்ணன், வேளாண்மை துணை இயக்குநா் தயாளன், வேளாண்மை உதவி இயக்குநா் செந்தில்வாசன் கணக்கெடுப்பு பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளில் பயிா் சேதம் குறித்து கணக்கெடுத்து நிவாரணம் வழங்காததால், தற்போது கணக்கெடுக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனா். பாதிப்புகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் விவசாயிகளை சமாதானம் செய்தனா். தொடா்ந்து, நாகை, பாலையூா், வடகுடி, கீழ்வேளூா், வேளாங்கண்ணி, திருப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிா் பாதிப்புகள் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினா்.

டிஜிட்டல் முறை கணக்கெடுப்பை திரும்ப பெற வேண்டும், பழைய நடைமுறையில் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே முழுமையான நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com