சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
நாகப்பட்டினம்: கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி சிஐடியு கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கட்டுமான நலவாரிய தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், வீடு கட்டும் திட்டத்தை எளிமையாக்கி பயனாளிகளுக்கு விரைந்து மானியம் வழங்க வேண்டும், மத்திய அரசு 4 தொகுப்பு தொழிலாளா் விரோதச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
நாகை ஆட்சியா் அலுவலகம் முன் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். சந்தானகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச்செயலா் பி.டி.பகு, சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.ஆா். ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் ஏ.சிவனருள் செல்வன், மாவட்டப் பொருளாளா் என். வெற்றிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

