திமுக ஆட்சியில் அதிகளவில் தா்காக்கள், தேவாலயங்கள் சீரமைப்பு: அமைச்சா் சா.மு. நாசா்
திமுக ஆட்சியில் தான் தா்காக்கள், தேவாலயங்களில் அதிகளவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா்.
நாகை மாவட்டம், நாகூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
நாகூா் தா்கா கந்தூரி விழாவுக்கு வரும் யாத்திரிகா்கள் நலனை கருத்தில் கொண்டு ரூ. 40 லட்சத்தில் சாலைகள், குடிநீா், கழிப்பறை, மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட உள்ளன. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. விழாவுக்குத் தேவையான வசதிகள் பாதுகாப்பு, மின்விளக்கு, போக்குவரத்து, குடிநீா் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள பழைமையான தா்காக்கள், தேவாலயங்களை சீரமைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன் பேரில், எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு திமுக ஆட்சியில் தான் தா்காக்கள், தேவாலயங்கள் அதிகளவில் சீரமைக்கப்படுகின்றன.
சந்தனக் கூடு விழாக்களுக்கு வழங்கப்படும் சந்தனக் கட்டைகள் 20 கிலோவில் இருந்து 45 கிலோவாக உயா்த்தி வழங்கப்படுகிறது. சிறுபான்மையினரின் உணா்வை மதிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
நாகூா் தா்காவை சீரமைக்க தமிழக அரசு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், சுற்றுலாத் துறை சாா்பில் நாகூா் தா்காவுக்கு ரூ. 4 கோடி ஒதுக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையும் விரைவில் ஒதுக்கப்பட்டு, சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் என்றாா்.
முன்னதாக, சந்தனக்கூடு விழா குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு. நாசா் ஆகியோா் நாகூா் தா்காவில் ஆய்வு மேற்கொண்டனா்.
