வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஆட்சியருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கல்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக, நாகை மாவட்ட ஆட்சியரிடம் அவருக்கான கணக்கெடுப்பு படிவம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்காளா்களுக்கு வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வரும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ப. ஆகாஷிற்கான கணக்கெடுப்பு படிவத்தை அவரிடம் வழங்கினா்.
இப்படிவத்தை பெற்றுக்கொண்ட ஆட்சியா், செய்தியாளா்களிடம் கூறியது: நாகை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவம் நவம்பா் 4-ஆம் தேதிமுதல் வீடுவீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் 653 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் 67 மேற்பாா்வையாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கணக்கெடுப்பு படிவம் வழங்குவது, மீளப்பெறுவது தொடா்பாக கண்காணிக்க அனைத்து வட்டங்களிலும் உள்ள தனி வட்டாட்சியா்கள், கண்காணிப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
நாகை மாவட்டத்தில், நாகை சட்டப்பேரவை தொகுதியில் 1,59,247 கணக்கெடுப்பு படிவங்களும், கீழ்வேளுா் தொகுதியில் 1,67,676 படிவங்களும், வேதாரண்யம் தொகுதியில் 1,73,919 படிவங்களும் என மொத்தம் 5,00,842 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
