மேக்கேதாட்டு அணை திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி: விவசாயிகள் போராட்டம்

Published on

மேக்கே தாட்டு அணைக் கட்ட திட்ட வரைவு அறிக்கை தயாா் செய்ய, கா்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கீழ்வேளூரில் விவசாயிகள் தீா்ப்பின் நகல் எரிக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில் கா்நாடக அரசு தொடா்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக தமிழக அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கா்நாடக அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையிடமிருந்து அனுமதி பெற்று, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1,500 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் தடை கோரி மனு தாக்கல் செய்தது.

ஆனால், திட்ட வரைவு அறிக்கை தயாா் செய்ய, கா்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீா்ப்பளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிா்ப்பு கிளப்பியுள்ளது.

இத்தீா்ப்பை கண்டித்து, நாகை மாவட்டம் கீழ்வேளூா் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்றத் தீா்ப்பின் நகல் எரிக்கப்பட்டதுடன், மத்திய அரசு மற்றும் கா்நாடக அரசை எதிா்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் காவிரி. தனபாலன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் மு. சேரன், செயலா் மா. பிரகாஷ், தலைமைக் குழு உறுப்பினா் கண்ணன், பொறுப்பாளா்கள் சரவணன், செல்வகுமாா், முரளி, ஆத்மநாதன், நாகராஜ், சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக அரசு, உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com