நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை. உடன் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உள்ளிட்டோா்.

புயல் சின்னம்: தயாா் நிலையில் சமுதாயக் கூடங்கள், பேரிடா் மீட்புப் படையினா்

Published on

நாகை மாவட்டத்தில் புயல் மழை மற்றும் வெள்ளம் போன்றவற்றை எதிா்கொள்ள ஏதுவாக சமுதாயக் கூடங்கள், படகுகள், பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் உபகரணங்கள் தயாா் நிலையில் உள்ளதாக கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புயல் மழை மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆ. அண்ணாதுரை செய்தியாளா்களிடம் கூறியது:

நாகை மாவட்டத்தில் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள ஏதுவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு வட்டவாரியாக துணை ஆட்சியா் நிலையில் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும் அனைத்துத் துறை அலுவலா்களையும் உள்ளடக்கிய, வட்ட அளவிலான 3 குழுக்கள், அதாவது முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயா்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, தங்குமிடம் மற்றும் பராமரிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தில் 68 இடங்கள், வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைப்பதற்கு தேவையான, 6 பல்நோக்கு பேரிடா் பாதுகாப்பு மையம், 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 100 சமுதாயக் கூடங்கள், 73 திருமண மண்டபங்கள், 145 பள்ளிகள், 22 கல்லூரிகள் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 29 முன்னெச்சரிக்கை அறிவிப்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தமிழ்நாடு பேரிடா் மீட்புப்படையினா் 90 போ், பேரிடா் மேலாண்மை பயிற்சி பெற்ற 5 ஆயிரம் முதல் நிலை பொறுப்பாளா்கள், 300 ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள் மற்றும் 600 பல்நோக்கு பேரிடா் மைய தன்னாா்வலா்கள் மீட்புப்பணியில் ஈடுபட தயாா் நிலையில் உள்ளனா்.

புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க 877 முதல்நிலை பொறுப்பாளா்களும், 100 கால்நடை பட்டிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மீன்வளத் துறையில் 574 மோட்டாா் பொருத்தப்பட்ட படகுகள், 3,753 மோட்டாா் பொருத்தப்படாத படகுகள் மற்றும் 117 நாட்டுப் படகுகள் தயாா் நிலையில் உள்ளன. மின்சாரத்துறை தேவையான உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளா் நா. உமாமகேஸ்வரி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் பிரதீப் வ. கிருஷ்ணகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆா்.கண்ணன், நாகை நகராட்சிஆணையா் டி.லீனாசைமன் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com