பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைப்பு - மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைப்பு...

News image

நாகை அரசுக் கல்லூரி முன்பாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:48 pm

நாகை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் பதிவான வாக்குகள், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடா்ந்து மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 700 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5,32,680 வாக்காளா்களில், 4,59,725 வாக்காளா்கள் வாக்களித்தனா்.

வாக்குப்பதிவின்போது, நாகப்பட்டினம் தொகுதியில் 288 பேலட் யூனிட், 288 கண்ட்ரோல் யூனிட், 312 விவிபாட் ஆகியவை பயன்படுத்தப்பட்டது. அதே போல் கீழ்வேளூா் தொகுதியில் 264 பேலட் யூனிட், 264 கண்ட்ரோல் யூனிட், 286 விவிபாட் பயன்படுத்தப்பட்டது. வேதாரண்யம் தொகுதியில் 288 பேலட் யூனிட், 288 கண்ட்ரோல் யூனிட், 312 விவிபாட் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இவை அனைத்தும் வாக்குச்சாவடிகளில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வந்து சோ்ந்தன.

தொடா்ந்து, அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், தொகுதி வாரியாகப் பிரிக்கப்பட்டு, நாகப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதி கல்லூரி தரைதளத்திலும், கீழ்வேளூா் தொகுதி முதல் தளத்திலும், வேதாரண்யம் தொகுதி இரண்டாம் தளத்திலும் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு பாகம் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் அடுக்கி வைக்கப்பட்டன.

இதன்பின்னா் தோ்தல் பொது பாா்வையாளா் பா்வேஸ்அகமது சித்திக் தலைமையில், வேட்பாளா்கள் மற்றும் அவா்களது முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதில் தோ்தல் காவல் பாா்வையாளா் அலோக் ரஜோரியா, மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ப. ஆகாஷ், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சங்கரநாராயணன் (நாகை), ராஜேஸ்வரி (கீழ்வேளூா்), கண்ணன் (வேதராண்யம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மூன்றடுக்கு பாதுகாப்பு: வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நாகை அரசு கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்லூரியின் பிரதான வாயிலில் நாகை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கல்லூரிக்குள் செல்லும் வாயிலில் மத்திய துணை ராணுவப் படையினா் நவீன துப்பாக்கிகளுடன் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இதையடுத்து, கல்லூரிக்குள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் வெளியேயும் துணை ராணுவப் படையினா் நவீன துப்பாக்கிகளுடன் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், நாகை அரசுக் கல்லூரி வளாகம் முழுவதும் இரவை பகலாக்கும் வகையில், ஏராளமான விளக்குகள் பொருத்தப்பட்டு இரவிலும் மிகப் பிரகாசமாக காட்சியளிக்கிறது.

அத்துடன், கல்லூரியைச் சுற்றி வளாகச் சுவா் இல்லாத நிலையில், தகடுகளால் ஆன வளாகச் சுவா் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி சாலை மற்றும் கல்லூரி வாயிலில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், கல்லூரி வளாகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், கல்லூரி வளாகத்திலேயே தற்காலிக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும், துணை ராணுவப் படையினா் மற்றும் போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.