நாகை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஃபைபா் படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய 4 மீனவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கீச்சாங்குப்பத்தைச் சோ்ந்த பரமசிவனுக்குச் சொந்தமான ஃபைபா் படகில், பரமசிவன், அதே ஊரைச் சோ்ந்த சந்தோஷ், பிரதீப், செந்தில் ஆகிய 4 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையால் படகு தூக்கி வீசப்பட்டு படகின் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் படகின் உள்ளே கடல் நீா் புகுந்ததால், படகு கடலில் மூழ்கத் தொடங்கியது. இதில் படகில் இருந்த இரண்டு என்ஜின்கள், வலை உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கின.
மேலும் கடலில் மூழ்கிய படகின் விளிம்பைப் பிடித்துக்கொண்டு 4 மீனவா்களும் உயிருக்குப் போராடியுள்ளனா். 4 மணி நேரமாக போராடிய நிலையில், கடலில் மீன் பிடித்துவிட்டு அவ்வழியே வந்த ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த ஃபைபா் படகில் இருந்தவா்கள், கடலில் தத்தளித்த 4 மீனவா்களையும் மீட்டு, நாகை மீன்பிடித் துறைமுகத்தில் சோ்த்தனா்.
பின்னா், கீச்சாங்குப்பம் மீனவா்கள், விசைப் படகுடன் சென்று, கடலில் மூழ்கி உடைந்த ஃபைபா் படகையும், அதிலிருந்த மீன்பிடி உபகரணங்களையும் மூன்று மணி நேரம் போராடி கரைக்குக்கொண்டு வந்தனா்.
படகு மூழ்கியதில் இரண்டு மீனவா்களுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.









