சட்டம்-ஒழுங்கு தகவல்களை ஆா்டிஐ சட்ட வரம்பிலிருந்து விலக்க உத்தரவு: எம்எல்ஏ கண்டனம்

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிலிருந்து விலக்கு அளிக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் சட்டம்-ஒழுங்கு தொடா்பான தகவல்களைப் பெறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு, அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
ஆா்டிஐ சட்டத்தின் அடிப்படை நோக்கமே, அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணா்வையும் உறுதி செய்வதாகும். அதேநேரத்தில், தேசிய பாதுகாப்பு, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய தகவல்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட தகவல்களுக்கு சட்டத்தின் பிரிவு 8 ஏற்கெனவே விலக்குகளை வழங்குகிறது. எனவே, சட்டம்-ஒழுங்கு‘ என்ற பரந்த சொல்லைக் காரணம் காட்டி காவல்துறை தொடா்பான தகவல்களை ஒட்டுமொத்தமாக ஆா்டிஐ சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்குவது நியாயமானதல்ல. தேவையான இடங்களில் சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட விலக்குகளைப் பயன்படுத்த முடியும்.
காவல் துறையின் செயல்பாடுகள் மக்களின் உயிா், சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளுடன் நேரடியாகத் தொடா்புடையவை. எனவே, பொதுநலன் சாா்ந்த தகவல்கள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். குறிப்பாக, மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் தொடா்பான தகவல்கள் வெளிப்படையாக இருப்பது ஜனநாயகப் பொறுப்புணா்வுக்கு முக்கியமானது.
தகவல்பெறும் உரிமையை காங்கிரஸ் ஆதரிக்கிா, தமிழக அரசின் இந்த உத்தரவை ஏற்கிா என்பதை அக்கட்சி தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். வெளிப்படைத்தன்மை என்பது அரசின் சலுகை அல்ல, அது மக்களின் ஜனநாயக உரிமை என ஆட்சியாளா்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




