பொறையாறு பணிமனை விபத்தைக் கண்டித்து, திருவாரூரில் அனைத்துப் போக்குவரத்துத் தொழிற்சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாறில் வெள்ளிக்கிழமை அதிகாலை போக்குவரத்துக்கழகப் பணிமனையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி அங்கிருந்த நடத்துநர், ஓட்டுநர்கள் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தைக் கண்டித்து, திருவாரூர் போக்குவரத்துப் பணிமனை கிளை அலுவலகம் முன்பு அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, தொமுச உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொறையாறில் நிகழ்ந்த விபத்துக்கு பொறுப்பேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விபத்துக்குக் காரணமான பணிமனை அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மன்னார்குடியில்...
மன்னார்குடியில் அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுக்கூர் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கிளை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,சிஐடியு குடந்தை கோட்ட துணைப் பொதுச் செயலர் ஏ.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
இதில் தொழிலாளர் முன்னேற்றச் சங்க துணைச் செயலர் வீரசேகர், ஏஐடியுசி மத்திய சங்க துணைத் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.