திருவாரூர் அருகே தனியார் பேருந்து நடத்துநரைத் தாக்கிய 4 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (50). இவர், தனியார் பேருந்தின் ஓட்டுநர். நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள மானலூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (38). இவர் அதே தனியார் பேருந்தின் நடத்துநராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, நாகையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை ஹரிஹரன் ஓட்டிச் சென்றார். கிடாரங்கொண்டான் என்னுமிடத்தில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை, முந்திச் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்றவருடன் தகராறு ஏற்பட்டதாம். இந்த பேருந்து அடியக்கமங்கலம் பகுதியில் செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர் பேருந்தை வழிமறித்து நிறுத்தினாராம். இதனால், நடத்துநர் சிவக்குமார், கீழே இறங்கி, வழிவிடும்படி கேட்டபோது, அங்கிருந்த சிலர் சிவக்குமாரை கடுமையாக தாக்கியதுடன், பேருந்தின் கண்ணாடியையும் உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த சிவக்குமார் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து, ஓட்டுநர் ஹரிஹரன் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருசக்கர வாகனத்தில் வந்த அடியக்கமங்கலம், செட்டித் தெருவைச் சேர்ந்த முகமது சிராஜூதீன் (32) என்பவரையும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது யாசின் (36), முகமது சேட்டு (42), வினோத்குமார் (28) என்பவர்களையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









