/

கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே தமிழ்நாடு அரசின் நெல்கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Updated On :24 ஜனவரி 2019, 1:29 am IST

மன்னார்குடி அருகே தமிழ்நாடு அரசின் நெல்கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
மன்னார்குடி அருகேயுள்ள நான்காம்சேத்தி கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் அப்பகுதி விவசாயிகள் தங்களின் உற்பத்தி நெல்லை விற்பனை செய்து வந்தனர். தற்போது, நான்காம்சேத்தி உள்ளிட்ட சுற்றுவட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் பயிரிடப்பட்டு அவற்றில் 60 சதவீதம் அறுவடை பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், நான்காம்சேத்தி நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல் உள்ளதால் அறுவடை செய்த நெல்லை களத்திலும்,கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகள் கொட்டிவைத்துள்ளனர். இந்நிலை தொடர்ந்து வருவதையடுத்து அறுவடைக்கு தயாராக உள்ள வயலிகளில் அறுவடை பணி செய்யாததால் நெல்கதிர்கள் முற்றி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மன்னார்குடி நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சென்று, அப்பகுதி விவசாயிகள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில்,போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்ததையடுத்து செவ்வாய்க்கிழமை கொள்முதல் நிலையத்துக்கு எடை இயந்திரம், மூட்டை தைக்கும் இயந்திரம், காலி சாக்குகள் அனைத்தும் கொண்டுவரப்பட்டதாம். இந்நிலையிலும் புதன்கிழமை கொள்முதல் நிலையம் திறக்கப்படாததையடுத்து துணை மண்டல மேலாளர் ஒளவைமணியிடம் விவசாயிகள் செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சதீஷ் என்ற பட்டியல் எழுத்தர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவரை அழைத்துக்கொண்டு கொள்முதல் அலுவலர்கள் நான்காம்சேத்திக்கு வந்துகொண்டு இருப்பதாக தெரிவித்தாராம். மாலை வரை யாரும் வராததுடன், கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த  நான்காம்சேத்தி விவசாயிகள் எஸ். செந்தில்குமார் என்பவர் தலைமையில், மன்னார்குடிக்கு வந்து கீழப்பாலம் நான்குசாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மன்னார்குடி காவல் ஆய்வாளர் ஏ. கண்ணன், டிஎன்சிஎஸ்சி கொள்முதல் அலுவலர்கள் இளங்கோவன், தமிழ்ராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக நிலை ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.