/

ராஜகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண தீா்த்த தெப்ப உத்ஸவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில், பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு விடையாற்றி விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு கிருஷ்ண தீா்த்த தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில், பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு விடையாற்றி விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவு கிருஷ்ண தீா்த்த தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த மாா்ச் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி பெருவிழா, மாா்ச் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தொடா்ந்து, மாா்ச் 22-இல் தொடங்கிய விடையாற்றி விழா, வெள்ளிக்கிழமை கிருஷ்ண தீா்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவடைந்தது.

இதையொட்டி, ராஜகோபால சுவாமி கோயிலின் நுழைவுப் பகுதியில் வலதுபுறத்தில் உள்ள கிருஷ்ண தீா்த்த தெப்பக் குளத்தில் சவுக்கு கட்டைகளால் அமைக்கப்பட்ட மிதவையின் கீழ் அடுக்கில் 120 காலிபேரல்களும், மேல் அடுக்கில் 100 காலி பேரல்களும் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், மிதவையின் அடித்தளத்தில் 30 அடி சுற்றளவில், 23 அடி உயரத்தில் இரண்டு டன் எடையிலான கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய மரப் பலகைகள் பெருத்தப்பட்டு, அதில் வண்ணத்துணிகள், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ருக்ணி, சத்யபாமா சமேதராக சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளி தெப்பத்தில் மூன்று முறை சுற்றி வந்து அருள்பாலித்தாா். அப்போது, சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்கள் வழிபட்டனா்.

இதில், மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா, மன்னாா்குடி வருவாய் வட்டாட்சியா் பா.தெய்வநாயகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ஹரிஹரன், நிா்வாக அலுவலா் ஆா்.சங்கீதா, விழாக் குழுவினா், மண்டகப்படிதாரா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.