கூத்தாநல்லூர்: அதிமுக நகரச் செயலாளராக ராஜசேகரன் நியமனம்
By DIN | Published On : 21st April 2022 05:42 PM | Last Updated : 21st April 2022 05:42 PM | அ+அ அ- |

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அதிமுக புதிய நகரச் செயலாளராக ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூத்தாநல்லூர் நகர எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக இருந்த, ஆர்.ராஜசேகரன், அதிமுக நகரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1990 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து, 1993-ல் வார்டு செயலாளராகவும், 2007 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மன்ற நகரச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார்.
மேலும், தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் ஆதரவோடு பல்வேறு கட்சிகளிலிருந்தும் ஏராளமான வரை அதிமுகவில் இணைத்துள்ளார். அதிமுகவில் சிறப்பாகப் பணியாற்றிய ராஜசேகரனை, நகரச் செயலாளராக, அதிமுகவின் திருவாரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் பரிந்துரை செய்தார். அதன்படி, நகரச் செயலாளராக ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவைத் தலைவராக ஆர்.குமார், நகர இணைச் செயலாளர் எஸ். செவ்வந்தி, துணைச் செயலாளர்கள் வி.ரேணுகா, கொய்யா என்ற பீ.மீரா மைதீன், பொருளாளர் ஜெ.சுவாமிநாதன், மாவட்டப் பிரதிநிகள் கே.விஜயா, கே.கமாலுதீன் உள்ளிட்டோர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு, மாவட்டச் செயலாளர் ஆர்.காமராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர் எல்.எம்.முகம்மது அஷ்ரப், நகர துணைச் செயலாளர் எம்.உதயகுமார், முன்னாள் நகரச் செயலாளர் டி.எம்.பஷீர் அஹம்மது, காளிதாசன், நகர் மன்ற உறுப்பினர்கள் சொற்கோ, முருகேசன் மற்றும் எல்.பீ.மைதீன் மற்றும் நகர காங்கிரஸ் தலைவர் எம்.சாம்பசிவம், மாவட்டச் செயலாளர் எஸ்.எம். சமீர் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளை மாலையணிவித்து வணங்கினர்.