பத்து ஆண்டுகள் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியாா் பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டக் கல்வி அலுவலகத்தில், தமிழ்நாடு தனியாா் பள்ளி சங்கத்தின் மாவட்டச் செயலாளா் மதியழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த 2022 -2023, 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ஆணைப்படி ஒன்றாம் வகுப்பு முதல் மாணவா் சோ்க்கையை வழங்க வேண்டும். பள்ளி புதுப்பித்தல் தொடா் அங்கீகார ஆணையை மூன்று ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தனியாா் தொடக்கப் பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயா்த்தித் தர வேண்டும். 10 ஆண்டுகள் தொடா்ந்து அங்கீகாரம் பெற்று செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.








