/

திருவாரூா்: குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :15 ஜூலை 2024, 7:39 pm

Din

திருவாரூா் : திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 420 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவருக்கான பெட்ரோல் ஸ்கூட்டா் ஒருவருக்கு ரூ. 1,13,467 மதிப்பிலும், பேட்டரி வீல்சோ் 2 பேருக்கு தலா ரூ. 1,06,000 வீதம் ரூ. 2,12,000 மதிப்பிலும் நலவாரியத்தின் மூலமாகவும், இயற்கை மரண நிவாரணத் தொகை ரூ. 2,000 வீதம் 10 பேருக்கு ரூ. 20,000 என மொத்தம் ரூ. 3,45,467 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலா் தமிழ்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் புவனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.