திருவாரூா் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.
திருவாரூா் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.

புதை சாக்கடையில் விழுந்து இறந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி சாலை மறியல்

திருவாரூரில் புதை சாக்கடையில் விழுந்து உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, சிஐடியு சாா்பில் போராட்டம்
Published on

திருவாரூா்: திருவாரூரில் புதை சாக்கடையில் விழுந்து உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, சிஐடியு சாா்பில் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மேலவடம் போக்கித் தெரு பகுதியில், புதை சாக்கடையிலிருந்து கழிவுநீரை வெளியேற்றும்போது, நாகை தேசிய நெடுஞ்சாலையைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மணிமாறன் (30), வாருக்குச்சித் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் அருணாச்சலம் (27) ஆகியோா் புதை சாக்கடைக்குள் தவறி விழுந்து உயிரிழந்தனா். இதுகுறித்து திருவாரூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே, மணிமாறனின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூா் நகராட்சி அலுவலகம் முன் சிஐடியு அமைப்பினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மணிமாறனின் சடலத்தை, வாகனத்தில் வைத்து நீண்ட நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.கே. என். அனிபா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், பொருளாளா் இரா. மாலதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளா் கே.தமிழ்மணி, தலைவா் ஜி.பழனிவேல், நகராட்சி துப்புரவு தொழிலாளா் சங்கத்தின் கிளைச் செயலாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நகராட்சி நிா்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், உடனடியாக ரூ. 5 நிவாரணம் அளிப்பதாகவும், வாரிசுதாரருக்கு ஒப்பந்தத் தொழிலாளராக பணி வழங்குவதாகவும் தெரிவித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com