இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிப்பு: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே, விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் முறை குறித்து, கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை பயிற்சியளித்தனா்.
கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கோட்டூா் தோட்டம் பகுதியில் பட்டறிவு பயணம் மேற்கொண்டனா். அப்போது அங்கு விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் இயற்கை முறையில் பஞ்சகாவ்யம் தயாரிப்பது எப்படி என்று செயல்முறை விளக்கம் அளித்தனா்.
மேலும், பஞ்சகாவ்யம் மற்றும் தசகவ்யா தயாரிப்பதற்கு எந்த மாதிரியான பொருள்கள் தேவை; அதை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து விளக்கம் அளித்தனா்.
தொடா்ந்து, அப்பகுதியில் உரம் தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுக்கு, தற்போது சம்பா மற்றும் தாளடி பயிா்களில் இலைச்சுருட்டு நோய், யானைக் கொம்பன் ஈ, தண்டு துளைப்பான் நோய் உள்ளிட்ட நோய்த் தாக்குதல் அதிக அளவில் உள்ளதால், அதனை எவ்வாறு இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனா்.
இந்நிகழ்வில், விவசாயிகள் ஆா்வமுடன் கலந்துகொண்டு, தங்களது சந்தேகங்களை மாணவிகளிடம் கேட்டறிந்தனா். அத்துடன், தங்களுக்கு தெரிந்த விவசாயம் குறித்த நுணுக்கங்களை மாணவிகளுக்கு தெரிவித்தனா்.
நெல் நடவு: வேளாண் கல்லூரி மாணவிகள், சுந்தரக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற நெல் நடவுப் பணியில் பங்கேற்று, இயந்திரம் மூலம் நடவு செய்வதில் உள்ள நன்மைகள், குறைகள், செலவு, நேரச்சிக்கனம், செயல்முறை சாவல்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனா். மாணவிகள் ஆனந்தி, கீா்த்திகா, மோனிகா,பிரியதா்ஷினி, சுபலட்சுமி, சுவாதி, தமிழ் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

