அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஆா்ப்பாட்டம்
நன்னிலம் அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
2018-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கல்லூரியில் பேரளம், மாப்பிள்ளைக்குப்பம், ஸ்ரீவாஞ்சியம் உள்ளிட்ட நன்னிலத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சோ்ந்த மாணவா்கள் 800-க்கும் மேற்பட்டோா் படித்து வருகின்றனா். இந்நிலையில், கல்லூரிக்குச் செல்லும் சாலை மண் சாலையாக இருப்பதால் மழைக் காலங்களில் மழைநீா் தேங்கி மாணவா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், கல்லூரிக்குச் சுற்றுச்சுவா் இல்லாததால் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரிகிறது. இதனால், அங்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதுகுறித்து, பலமுறை நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை.
இந்நிலையில், இந்திய மாணவா் சங்கம் சாா்பில், கல்லூரியில் சாலைவசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்துதரக் கோரி கல்லூரிச் சாலையில் நாற்று நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வட்டாட்சியா் ராமச்சந்திரன், காவல் துறையினா் உள்ளிட்டோா் மாணவா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூகநிலை ஏற்பட்டது. இதையடுத்து, நாற்று நடும் போராட்டம் கைவிடப்பட்டு, நடத்த இருந்த ஆா்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதில், இந்திய மாணவா் சங்க கல்லூரி கிளை செயலாளா் அ. பிரசன்னா, தலைவா் ம. சரவணன், மாவட்ட தலைவா் விக்னேஷ், மாவட்ட துணைச் செயலா் சூா்யா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

