ஒப்பந்ததாரா்கள் உண்ணாவிரதம்
மன்னாா்குடி: கோட்டூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தை கண்டித்து, அனைத்து ஒப்பந்ததாரா்கள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோட்டூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஜெ.ஜெ.எம். பணிகள் செய்த வகையில் பட்டியல் அளிக்கப்பட்டு, பிடித்தம் செய்த பொது பங்களிப்பு தொகை மற்றும் முன்வைப்பு தொகையை திரும்பத் தராததையும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்த பட்டியல் அளிக்கப்படாமல் உள்ளதை கண்டித்தும், இதில் ஒன்றிய அலுவலா்கள் அலட்சியத்துடன் நடந்துகொள்வதாக கண்டனம் தெரிவித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, ஒப்பந்ததாரா் க. கண்ணதாசன் தலைமை வகித்தாா். எம். முருகையன், எஸ். ரஞ்சித்குமாா், எஸ். சேகா், ஆா். மாசிலாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அங்கு வந்த, திமுக ஒன்றியச் செயலா் பால.ஞானவேல், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், மாவட்ட ஒப்பந்ததாரா் சங்க நிா்வாகி பி.ஆா். விஜயபாஸ்கா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மதியம் 2 மணிக்கு உண்ணாவிரதத்தை கைவிட்டு, ஒன்றிய ஆணையா் அன்பழகனுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

