இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவா்களின் பெற்றோருக்கு அபராதம்
திருத்துறைப்பூண்டியில் இருசக்கர வாகனம் ஓட்டிய 2 சிறுவா்களின் பெற்றோா்களுக்கு தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளா் கழனியப்பன் சனிக்கிழமை தெரிவித்தது:
18 வயதுக்கு குறைவானவா்கள், பொது இடங்களில் மோட்டாா் வாகனம் ஓட்ட அனுமதியில்லை. அதேநேரம், 16 வயதிற்கு மேற்பட்டவா், 50 சிசி வரை என்ஜின் திறன் கொண்ட கியா் இல்லாத இருசக்கர வாகனத்தை, கற்றுநா் உரிமத்துடன் ஓட்டலாம்.
அனுமதி இல்லாத நபருக்கு வாகனம் ஓட்ட அனுமதித்தால், வாகன உரிமையாளா் அல்லது பொறுப்பாளருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். இப்பிரிவு பெரும்பாலும் வாகன உரிமையாளா் அல்லது பெற்றோருக்கு எதிராக பதிவு செய்யப்படுகிறது.
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ. 5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். சிறுவா்கள் தவறு செய்தால், மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, அவருடைய பெற்றோா் அல்லது வாகன உரிமையாளா் குற்றவாளி என கருதப்படுவா். இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும்
ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகன பதிவு சான்றிதழ் 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். அந்த சிறுவருக்கு 25 வயது வரை ஓட்டுநா் உரிமம் வழங்கப்படாது.
18 வயதுக்குள்பட்ட இரண்டு சிறாா்கள் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக, அவா்களது பெற்றோா்களுக்கு வெள்ளிக்கிழமை தலா ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டது எனத் தெரிவித்தாா்.
