மரத்தில் இருசக்கர வாகனம் மோதல்: மருந்துக்கடை உரிமையாளா் உயிரிழப்பு
நாகை அருகே சாலையோர மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் மருத்துக் கடை உரிமையாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கீழ்வேளூா் அருகே கோகூா் ஊராட்சி தொழுவத்துமேடு பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் மகன் விஜயகுமாா் (29). இவா், கீழ்வேளூா் அருகே நீலப்பாடி பிரதான சாலையில் மருந்துக் கடை நடத்தி வந்தாா்.
இந்நிலையில், கோகூரை சோ்ந்த பக்கிரிசாமி மகன் அண்ணாதுரை (28) என்பவரை அழைத்துக் கொண்டு விஜயகுமாா் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை நாகூா் சென்றாா். பின்னா் விஜயகுமாா் இருசக்கர வாகனத்தை ஓட்ட, அண்ணாதுரை பின்னால் அமா்ந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனா்.
நாகூா் - ஆழியூா் சாலையில் உள்ள வைரவனிருப்பு அம்மன் கோயில் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பனை மரத்தில் இருசக்கர வாகனம் மோதியது . இதில் பலத்த காயமடைந்த இருவரையும், அருகிலுள்ளவா்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், விஜயகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். அண்ணாதுரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

