வாளவாய்க்கால் பேருந்து நிறுத்தத்தை சீரமைக்கக் கோரிக்கை
திருவாரூா் அருகே வாளவாய்க்கால் பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் வாளவாய்க்கால் பகுதியில் பேருந்து நிறுத்தம் பழுதடைந்த நிலையில் அகற்றப்பட்டு விட்டது. இதனால், நாகை, கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள், வெயிலிலும், மழையிலும் பாதிப்புகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் கூறியது: வாளவாய்க்கால் பகுதியில் பேருந்து நிறுத்தம் பழுந்தடைந்து நீண்ட நாள்கள் ஆகின்றன. தற்போது வெயிலுக்காக மேற்புறப்பகுதியில் லேசாக தடுக்கப்பட்டிருந்தாலும், மழைக்கு பெரும் சிரமங்களை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து நகராட்சியிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மழைக்காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்றாா்.

