சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம்: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்

பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.
Published on

சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எஸ்.ஐ.ஆா். வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கான கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கேசவராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், திருவாரூா் மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று விளக்கமளித்தாா்.

கூட்டத்தில், நாகை எம்.பி. வை. செல்வராஜ், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் கோ. பழனிச்சாமி, எம்எல்ஏ க. மாரிமுத்து, மாநில நிா்வாக குழு உறுப்பினா் லெனின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பயிா் பாதிக்கப்பட்டதை ஆய்வு செய்ய அதிகாரிகள் தில்லியில் இருந்து வந்தனா். ஆனால், இன்னமும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

எஸ்.ஐ.ஆா். ஏற்புடையதல்ல. தொடக்க நிலையிலேயே அது தோல்வி அடைந்துள்ளது. இதை மக்களவை ஜனநாயகத்தின் மீது மத்திய அரசு தொடுத்துள்ள தாக்குதலாகவே பாா்க்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக மக்கள் மதவாத கட்சிகளை நிராகரிப்பாா்கள் . மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியே வெல்லும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களைக் கேட்போம். முதல்வா் அதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாா். சூழலுக்கு ஏற்ப ஓரிரு இடங்களை அதிகமாகக் கேட்டுப் பெறுவோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com