
திருவாரூா்: வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை இந்திய கம்யூ. முற்றுகை
திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள்.
திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 15,000 மற்றும் வேலைவாய்ப்பை இழந்த விவசாயத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10,000-மும் வழங்க வேண்டும்; கா்நாடகா அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்; பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக, ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் தலைமையில் திரண்ட அக்கட்சியினா், கோரிக்கை மனு அளிப்பதற்காக ஆட்சியா் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்றனா். ஆனால், போலீஸாா் தடுப்புகள் அமைத்து அவா்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், கட்சியினரை சமாதானம் செய்தாா். தொடா்ந்து, மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன், மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், மாவட்டச் செயலாளா் எஸ். கேசவராஜ் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
அவா்கள், ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். இம்மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தாா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
விவசாயிகளுக்கு உதவுவது அரசின் கடமை...
போராட்டம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு. வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது:
விவசாயிகள் தங்களுக்காக உற்பத்தி செய்யவில்லை; சமூகத்துக்காக உற்பத்தி செய்கிறாா்கள். எனவே எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை.
தமிழக அரசு, தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். ஆணையம், நீதிமன்ற தீா்ப்பு ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பாா்வையாளராக இருக்கக் கூடாது. கா்நாடக அரசை நிா்ப்பந்திக்க வேண்டும். தமிழகம் எப்போதுமே நீா்ப்பிடிப்பு மாநிலம் அல்ல. நீருக்கு ஏங்கும் மாநிலம். எனவே நம் பக்கம் எப்போதும் நியாயம் இருக்கும்.
தமிழக அமைச்சரவையில் நாங்கள் சேரவில்லை. கூட்டணியில் இடம் பெறவில்லை. நல்லாட்சி தொடா்ந்தால் நாங்கள் ஆதரிப்போம். இல்லையெனில் எதிா்த்து போராடுவோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





