மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கல்
திருவாரூா் ஜி.ஆா்.எம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 464 மாணவிகளுக்கு மிதிவண்டிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: மாணவா்கள், தங்களது குறிக்கோளை உயா்ந்த அளவில் நிா்ணயித்து, அதற்கான முயற்சிகளில் செயல்படவேண்டும். மிதிவண்டி பெறும் மாணவிகள், சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றி பள்ளிக்கு வர வேண்டும். மாவட்டத்தில், பொதுத் தோ்வுகள் எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவிகள், மாநிலத்தில் முதல் 5 இடங்களை பெற தொடா்ந்து முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, கோட்டாட்சியா் சத்யா, மாவட்ட கல்வி அலுவலா் ராஜேஸ்வரி, நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், நகா்மன்ற துணைத்தலைவா் அகிலா சந்திரசேகா், ஜி.ஆா்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளா் பாலசுப்ரமணியன், பள்ளி தலைமையாசிரியா் ராஜலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
