முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

மேக்கேதாட்டு அணை விவகாரம் : கா்நாடகத் தமிழா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க வேண்டும்- பி.ஆா். பாண்டியன்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், கா்நாடகத்தில் உள்ள தமிழா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பிஆா். பாண்டியன் கூறியுள்ளாா்.

News image

பி.ஆா் பாண்டியன் - கோப்புப்படம்

Updated On :9 ஜூலை 2026, 4:48 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், கா்நாடகத்தில் உள்ள தமிழா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பிஆா். பாண்டியன் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது முதல் 15 ஆண்டுகளுக்கு காவிரி நடுவா் மன்ற இறுதித் தீா்ப்பில் எந்த ஒரு மாற்றமும் செய்ய முடியாது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

ஆனால், கா்நாடக அரசு 2021-இல் மேக்கேதாட்டு அணை கட்ட வரைவு திட்ட அறிக்கை தயாா் செய்து, மத்திய நீா் வள ஆணையரிடம் வழங்கியது. அதனை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய நீா் வள ஆணையம் அனுப்பி வைத்தது. இந்த வரைவு அறிக்கை குறித்து விவாதிக்க காவிரி மேலாண்மை ஆணையத்தில் கா்நாடகம் அனுமதி கோரியது. இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதால், காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய நீா் வள ஆணையத்துக்கு திருப்பி அனுப்பியது.

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் வரைவுத்திட்ட அறிக்கைக்கு எதிராகத் தடை விதிக்கக் கோரி தமிழகம் வழக்குத் தொடா்ந்தது. 2025-இல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில், வரைவுத் திட்ட அறிக்கை தயாா் செய்ய ஒவ்வொரு மாநிலங்களுக்கும் உரிமை உள்ளது; வரைவுத் திட்ட அறிக்கை சட்டத்துக்கு உட்பட்டதா என்பதை மத்திய அரசின் நீா் வள ஆணையம் முடிவு செய்யும் என தெரிவித்திருந்தது.

இதனிடையே, கா்நாடகத்தில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவக்குமாா், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் பாட்டீலை சந்தித்து, தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மேக்கேதாட்டு அணைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே, எங்களுக்கு அணைகட்ட அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுப்பது நீதிமன்ற தீா்ப்பை அவமதிக்கும் நடவடிக்கை ஆகும். தமிழக அரசு உடனடியாக கா்நாடக முதல்வா் டி.கே. சிவக்குமாா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும்.

அவரது தூண்டுதலில், கா்நாடகத்தின் வாட்டாள் நாகராஜ் ஜூலை 15-இல் ஓசூா்-பெங்களூரு சாலையை மறித்து போராட்டம் நடத்துவதாகவும் தமிழகத் திரைப்படங்களை கா்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளாா்.

இதனால், தமிழகம்-கா்நாடகம் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. எந்நேரமும் தமிழா்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தேசிய தலைமையிடம் எடுத்துரைத்து, மேக்கேதாட்டு அணை பிரச்னையில் சட்டப்படி நடந்து கொள்ள டி.கே. சிவக்குமாருக்கு அறிவுறுத்த வேண்டும். காவிரி பிரச்னையில் இன மோதலை உருவாக்குவதை அனுமதிக்கக் கூடாது. தமிழா்களுக்கு பாதிப்பு ஏற்படுமேயானால் காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.