ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

லாபம் ஈட்டித்தரும் அலங்காரப் பூச்செடிகள்!

கண்ணுக்குக் குளிர்ச்சியையும், மனத்துக்கு மகிழ்வையும் அள்ளித் தரும் பசுமையான இயற்கை வனப்புகளை விரும்பாதவர் உலகில் உண்டோ? பச்சைப் பசேல் மரங்களும், செடிகளும், அழகழகான மலர்களும் இயற்கை அன்னை மானுட சமூகத்த

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:40 pm

வே.சுந்தரேஸ்வரன்

கண்ணுக்குக் குளிர்ச்சியையும், மனத்துக்கு மகிழ்வையும் அள்ளித் தரும் பசுமையான இயற்கை வனப்புகளை விரும்பாதவர் உலகில் உண்டோ? பச்சைப் பசேல் மரங்களும், செடிகளும், அழகழகான மலர்களும் இயற்கை அன்னை மானுட சமூகத்திற்கு வழங்கிய பொக்கிஷங்கள்.

ஆனால், தொழில் வளர்ச்சியும், வாகன உற்பத்திப் பெருக்கமும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருவது இன்றைய காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாததாகி விட்டது.

இதற்குத் தீர்வாக மரம் வளர்ப்புத் திட்டம் ஒருபுறம் இருந்தாலும், வீடுகளில் உள்ள குறுகிய இடத்தில்கூட சிறு-குறு அழகுச் செடிகளையும், மலர்ச் செடிகளையும் தோட்டமாகவோ, அலங்காரமாகவோ வைக்கும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுவதுடன், குடியிருப்புப் பகுதியில் அமைதியும், ஆரோக்கிய சூழலையும் ஏற்படுத்துவதாக அமைகிறது.

கிராமப்புறங்களில் பசுமை இயற்கையாகவே கொட்டிக் கிடக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களில் மக்கள்தொகைப் பெருக்கத்தால் சிறு இடத்தைக் கூட வியாபாரத் தலமாகவோ, குடியிருப்பாகவோ மாறி நகரங்கள் கான்கிரீட் வனங்களாகிவிட்ட நிலை. இதனால், வீட்டில் பசுமையை ஏற்படுத்த ஜன்னல், முகப்பு, முற்றம், வராந்தா, வரவேற்பறை, கார் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் என பல இடங்களிலும் பூச்செடிகளையும், பசுமை தரும் செடிகளையும் வைப்பதில் உயர்தட்டு மக்கள் மட்டுமின்றி நடுத்தர வருவாய்ப் பிரிவினரும்கூட தற்போது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

மரங்கள் அடர்ந்த நகரமாக மாறிவரும் தில்லியில் இதுபோன்ற பூந்தோட்டம் அமைப்பதற்கான செடிகளையும், பூச்செடிகளையும் விற்கும் நர்சரி கார்டன் தொழிலும் வளர்ந்து வருகிறது. மேலும், லாபம் ஈட்டும் தொழிலாகவும் உருவாகியுள்ளது. இந்த நர்சரி கார்டன்களில் பூச்செடிகள், பழம் தரும் செடிகள், மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், நிழற்சாலை மரங்கள், வீட்டினுள் வைக்கக்கூடிய செடிகள், பூங்கொத்துச் செடிகள், மெக்சிகன், கொரியா, பர்முடா என அந்தந்த நாட்டுப் புல் வகைகள், இயற்கை ரசிப்புத் தாவரங்களாக விற்பனை செய்யப்படுகின்றன.

தில்லியில் உள்ள துவாரகா, சுந்தர் விஹார், ஜோர் பாக், பிஜ்வாசன் பாலம் விஹார், குர்காவ்ன், நொய்டா, சுல்தான்பூர், ஆர்.கே.புரம், நிஜாமுதின், ஹூடா, கன்னாட் பிளேஸ், சாத்ரா, உத்தம் நகர், ஜீவன் நகர் உள்ளிட்ட பல இடங்களில் நர்சரி கார்டன்கள் அமைக்கப்பட்டு விற்பனையும் அமோகமாக இருக்கின்றன.

"மதுரா மயூர்விஹார் ஃபேஸ் 1' பகுதி எதிரே உள்ள யமுனை ஆற்றின் கரையை ஒட்டியுள்ள யமுனா காதர், பான்டூன்புல் சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான நர்சரி கார்டன்கள் உள்ளன.

பசுமைப் போர்வையில் கோடு வரைந்தது போன்று அந்த நர்சரி கார்டன்கள் சாலையின் இருமருங்கிலும் சங்கிலித் தொடராக அமைக்கப்பட்டுள்ளன. விதவிதமான மலர்ச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

காலை 7 மணி தொடங்கி மாலை வரை இப்பகுதியில் மலர்ச் செடிகள் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்தும், சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் காரிலும், இரு சக்கர வாகனங்களிலும் வந்து வாங்கிச் செல்கின்றனர். தவிர, மூன்று சக்கர உந்து வண்டியில் இச்செடிகள் கமிஷன் அடிப்படையில் விற்பதற்காகவும் பலர் வாங்கிச் செல்கின்றனர்.

நர்சரி கார்டன் தொழில் குறித்து நம்மிடம் விளக்கினார் ஜெய் மாதா நர்சரி கார்டன் உரிமையாளர் சூரஜ் விஸ்வாஸ்:

""நர்சரி தோட்டம் வளர்ப்புத் தொழில் நல்ல லாபம் தரும் தொழிலாக வளர்ந்து வருகிறது. ஆனால் அதை முறையாகச் செய்ய வேண்டும். என் தோட்டத்தில் இரண்டு பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். பூச்செடிகளை வளர்ப்பதற்கான பாத்தி அமைப்பது, தண்ணீர் விடுவது, மட்பாண்டத்தில் மண் நிரப்பிச் செடியை நடுவது. செடிகளைப் பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்களுடன் நானும் மேற்கொள்கிறேன்.

தவிர, என்னிடம் 20 உந்து வண்டிகள் உள்ளன. பூச்செடிகளையும், அலங்காரச் செடிகளையும் குறைந்த விலைக்குத் தருகிறேன். அதை எடுத்துச் சென்று விற்பனை செய்வோருக்கு ஆயிரம் ரூபாய்க்கு ரூ. 100 கமிஷன் தருகிறேன். நான் நிர்ணயம் செய்யும் விலைக்கு மேல் கூடுதலாக வைத்து விற்று லாபம் ஈட்டுவோரும் உண்டு.

எங்களது தோட்டத்தில் கேல், கேந்தா, குல்தாவ்ரி போன்ற பூச்செடிகளும், பன்சட்டி, ஹராலியா போன்ற பல மரச்செடிகளையும் விற்பனை செய்கிறேன். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை விற்பனை நடைபெறும். தில்லியின் தட்பவெப்ப நிலை ஒன்றுபோல் இருப்பதில்லை. அதிகபட்ச வெயிலும், அதிகபட்ச

குளிரும் இருக்கின்றன. இதனால், பூச்செடிகளை கொல்கத்தா, புனே, ஆக்ரா, கஜுரோஹா ஆகிய இடங்களில் இருந்து தருவிக்கிறோம். பூச்செடிகள் ரூ. 20லிருந்து அதிகபட்சமாக (மரச்செடி) ரூ. 3 ஆயிரம் வரை விற்பனை செய்கிறேன். 25 ஆண்டு வயதுடைய ஆலமரம், அரசமரச் செடிகளும் என்னிடம் உள்ளன.

இங்குள்ள நர்சரி கார்டன்கள் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் இருப்பதால் அவ்வப்போது அதிகாரிகள் வந்து இடத்தைக் காலி செய்யும்படி கூறுகின்றனர். அரசுக்கு வாடகை செலுத்தவும் தயாராக இருக்கிறோம். இங்கே இதுபோன்ற நர்சரி கார்டன் இருப்பதால் நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படுவதாக நம்புகிறோம்.

இப் பகுதியில் நர்சரி கார்டன் தொழிலை நம்பி 500 பேர் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர் உள்ளனர். ஆகவே, அரசு உதவி செய்ய முன்வந்தால் நன்றாக இருக்கும்..'' என்றார்.  

பூச்செடிகளை ரிக்ஷாவில் சென்று விற்பனை செய்துவரும் மயூர் விஹார் ஃபேஸ் 3 பகுதியைச் சேர்ந்த ரத்தன் கூறியதாவது:

""கடந்த 15 ஆண்டுகளாக இந்த மலர்ச் செடிகளை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். நாளொன்றுக்கு ரூ. 200 வரை வருவாய் கிடைக்கும். நாளொன்றுக்கு 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் வரை ரிக்ஷா ஓட்டி இந்த வியாபாரத்தில் ஈடுபடுகிறேன். மலர்ச்செடிகள் விற்பனை நன்றாக இருக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.